சென்னை: இஸ்லாமியர்கள், புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,  தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, அகில இந்திய ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்யும் வகையில் நாடு முழுவதும் 21 விமானங்கள் புறப்பாடு தலங்களாக இருந்து வந்தது. பின்னர் கொரோனா காலக்கட்டத்தில் அவை 10ஆக குறைக்கப்பட்டது. இதில் சென்னையும் நீக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலங்கள் பட்டியலில் சேர்க்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிஃரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதின்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி  நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 34 ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் ஹஜ் பயணிகளின் புறப்பாட்டு தலமாக இருந்து வந்தது. சுமார் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பயணிகள் சென்னையில் இருந்து புனித பயணம் மேற்கொண்டனர். தற்போது அது தடுக்கப்பட்டுஉள்ளது என்று கூறப்பட்டது.

அப்போது ஹஜ் கமிட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,, சென்னை விமான நிலையத்தையும் புறப்பாட்டு தலமாக அறிவிக்க கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதை ஹஜ் கமிட்டி பரிசீலித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.