மேலும் நீட்டிக்கப்படுமா, பணம் எடுக்கும் கட்டுப்பாடு?

Must read


டில்லி,
நாடு முழுவதும் தற்போது வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு பல கட்டுபாடுகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 8ந்தேதி இரவு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, பழைய பணத்தை வங்கிகளில் கொடுத்து புதிய பணம் மாற்றவும், மக்கள் அன்றாட செலவுக்கு தேவையான பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மக்களை பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும்படி மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. டிசம்பர் 30ந்தேதி வரையே பழைய பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், வங்கிகளில் இருந்து பணம் எடுக்கவும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது நாட்டில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. மக்கள் அன்றாட தேவைக்கே பணமில்லாமல் திண்டாடி வருகிறார்கள். பல இடங்களில் வங்கிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதன் காரணமாக பணம் வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, வங்கிகளில் இருந்து  அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம் என்று அறிவித்தி ருந்தாலும், பெரும்பாலான  வங்கிகளில் பணமில்லை என்று கூறி வாடிக்கையாளர்கள் கேட்கும் பணத்தை கொடுக்க மறுத்து வருகிறார்கள்.
அதேபோல்  ஏ.டி.எம்.களிலிருந்து, ஒரு நாளைக்கு 2500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று அரசு அறிவித்திருந்தாலும், ரூ.2000 மட்டுமே எடுக்க முடிகிறது.
மத்திய அரசின் அறிவிப்பு முடிவடைய இன்னும் ஓரிரு நாட்களே இருப்பதாலும், பணப்புழக்கம் இன்னும் சரியான நிலைக்கு வராததாலும் இந்த கட்டுப்பாடுகள் மேலும் சில மாதங்கள் நீடிக்க வேண்டும் என வங்கிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பழைய நோட்டிற்கு பதிலாக, இதுவரை 40 சதவிகித புதிய நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்திற்கு வந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், பணம் எடுக்க உள்ள கட்டுப்பாடுகளை நீக்கினால், அது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்  என சமீபத்தில் நடைபெற்ற  ரிசர்வ் வங்கி கூட்டத்தில், வங்கிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இதே கட்டுப்பாடு கள் நீடிக்கப்படுமா அல்லது வேறு ஏதேனும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

More articles

Latest article