சென்னை:

சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், சீன நாட்டு அதிகாரிகள் இன்று மாமல்லபுரம் வருகை தந்து பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர்.

‘உலக பிரசித்தி பெற்ற சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு வருகிற அகடோபர்-11-ந்தேதி சீனஅதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் வருகை தர உள்ளனர். இதன் காரணமாக அங்கு பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழகஅரசும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  ன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் இன்று சீன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வருகை தரும் அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந்தேதி இந்தியா வருகிறார். அவரது தனி விமானம் சீனாவில் இருந்து நேரடியாக சென்னை வருகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கும் அவர், பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார்.

இதற்காக சென்னையில் முகாமிடும் பிரதமர் மோடி,  சென்னை விமான நிலையத்தில் சீன அதிபரை வரவேற்று  ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்கிறார். ஹெலிகாப்டர் திருவிடந்தையில் தரை இறங்கிய பிறகு, அங்கிருந்து  பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காரில் கோவளத்துக்கு புறப்பட்டு செல்வார்கள்.

கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாமல்லபுரத்தில் உள்ள சில அபூர்வ, அதிசய சிலைகளுக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் சந்திக்க உள்ள இடங்களில் இந்திய மற்றும் சீன அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போதே அங்கு நூற்றுக்கணக்கான  சிறப்பு காவல் படையினர் நியமிக்கப்பட்டு இரவு பகல் பாராது காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  சீனாவில் இருந்து வந்திருந்த அந்நாட்டு தூதரக அதிகாரிகள் சுற்றுலாத்துறை, தொல்லியல்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள் என 20-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மோடி-சீன அதிபர் வருகையையொட்டி பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலாஷேத்ரா மாணவர்கள் இந்த கலை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இந்த கலை நிகழ்ச்சிகளை மோடியும், சீன அதிபரும் பார்வையிடுகிறார்கள்.

இந்த கலை நிகழ்ச்சிக்காக கலாஷேத்ரா மாணவர்கள் ஒத்திகை பார்த்து வருகின்றனர். இந்தியா வின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதுபோல, மாமல்லபுரம் பகுதியில் உள்ள   சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரி களுக்கு  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் பழுதடைந்த சாலைகளை பராமரிக்கவும் நெடுஞ்சாலைத்துறையிருக்கு ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.