டில்லி:

க்களவை தேர்தலில் பாரதியஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து 2வது முறை யாக பாஜக அமைச்சரவை மோடி தலைமையில் இன்று இரவு பதவி ஏற்கிறது.

இதையொட்டி வெளிநாட்டு அதிபர்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் டில்லிக்கு வருகை புரிந்து வருகின்றனர்.  வங்க அதிபர்,  தாய்லாந்து நாட்டு தூதர் உள்பட பலர் வருகை தந்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 7 மணிக்கு 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்க உள்ளது.  அவரது  பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

பிம்ஸ்டெக் எனப்படும் வங்கக் கடல் சார்பு நாடுகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.  மேற்கு வங்கத்தில் அரசியல் படுகொலைக்குள்ளான பாஜக தொண்டர் குடும்பத்தினரும் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரும் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டி ருக்கின்றனர். இதன் காரணமாக மோடியின் பதவி ஏற்பு விழா அரசியல் சாயம் பூசப்படுவதாக மம்தா குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது இந்தியா வந்துள்ளார்.  தாய்லாந்தின் சிறப்பு தூதர் கிரிசாடா பூனராக் மற்றும்  தாய்லாந்தின்  இந்தியா வுக்கான தூதர் சுட்டிங்டார்ன் கொங்சாக்டியும் வருகை தந்துள்ளார்.

இதையொட்டி பதவியேற்பு விழா நடைபெறும் டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.  துணை ராணுவப் படை, அதி விரைவு படை, டெல்லி காவல்துறை என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போர் வீரர்கள் நினைவிடம், ராஜ்காட் மற்றும் வாஜ்பாய் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியப் பின் பிரதமர் மோடி பதவியேற்கவுள்ளதால், அந்தப் பகுதிகளில் இருக்கும் உயர்ந்த கட்டடங்களில் தொலைதூரத்தில் இருந்து குறி பார்த்து எதிரிகளை சுடும் ஸ்னைபர் துப்பாக்கிச் சூடு வீரர்களும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்க டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையில் இருந்து மட்டும் 10 ஆயிரம் பேர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன்  பதவியேற்பு விழாவுக்காக பிரதமர் மோடி செல்லும் வழி நெடுகிலும், 2 ஆயிரம் பேர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

மோடி இன்று இரவு 7 மணிக்கு பதவி ஏற்கும் நிலையில், தலைநகர் டில்லியில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பல முக்கிய சாலைகள் பொதுமக்கள் போக்குவரத்துக்காக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விஜய் சவுக் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை செல்லும் சாலைகள், தெற்கு மற்றும் வடக்கு அவின்யூ, சர்ச் சாலை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.