டில்லி

புது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நுகர்வோர் பாதுகாப்புக்கான சர்வதேச கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.  இதில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றன.   இந்த கருத்தரங்கை இந்தியப் பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றினார்.   மோடியுடன் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பங்கேற்றார்.

மோடி தனது உரையில், “நாட்டின் பொருளாதாரம் சீராகி வருவதுடன் வளர்ச்சியும் பாதிப்படையாமல் உள்ளது.  பொருளாதார கட்டமைப்பு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது.   மேலும் ஜி எஸ் டி மூலமாக மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.  இதனால் வரிச்சுமை குறைந்தது, நுகர்வோர் மற்றும் நடுத்தரக் குடும்பத்துக்கு மிகவும் உதவி உள்ளது.   ஜி எஸ் டி அமுலாக்கம் தொழில் வளர்ச்சியை அதிகரித்து விலையைக் குறைக்கும் என்பதால் நாட்டு மக்கள் அனைவரும் பலன் பெறுவார்கள்.

நுகர்வோர் பாதுகாப்புக்காக புதிய சட்டம் ஒன்று அமுல் படுத்த உள்ளது.  தவறான விளம்பரங்களில் இருந்து நுகர்வோரை காக்க இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது.   இந்த சட்டத்தின் மூலம் தவறான விளம்பரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.   நுகர்வோரின் பாதுகாப்பு என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானது.  இந்த நடவடிக்கை நாட்டின் எதிர்காலத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.