மோடி மறு ஆய்வு: ரூ 500, 1000 மீண்டும் செல்லுமா?

Must read

டில்லி,
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து தேவையான மாற்றம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். இதன் காரணமாக மீண்டும் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வருமான என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நவம்பர் 8ந் தேதி இரவு திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக  அறிவித்தார். இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று முதல் இன்று வரை மக்கள் போதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமல் தெருத் தெருவாக அலைந்து வருகிறார்கள்.
அரசின் திட்டம் கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்கும் திட்டம் என்றாலும், உரிய திட்டமிடல் இல்லாமல் அறிவிப்பு வெளியிட்டதால், மக்களின்  அன்றாட அடிப்படைத் தேவைகளுக்குக் கூட கையில் பணம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் மக்கள் மிகப் பெரும் தவிப்புக்குள்ளாகி விட்டனர்.
modi-agra1
அதை விடக் கொடுமையாக பணம் பெற வரிசையில் காத்திருந்து, வங்கிகளின் முன்பும், ஏடிஎம் மையங்கள் முன்பும் காத்துக் கிடந்து இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்து போயுள்ளனர்.
இதன் காரணமாக  மக்கள் மத்தியில் தொடர்ந்து கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அதற்கு தகுந்தார் போல் எதிர்க்கட்சியினரும் எரிகிற நெய்யில் எண்ணை ஊற்றி வருகிறார்கள். இதன் காரணமாக பல இடங்களில் கலவரம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உள்ளதாக புலனாய்வு துறை தகவல் கூறியுள்ளது.
மேலும் உச்ச நீதி மன்றமும், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாலும், நாட்டில் கலவரச் சூழல் நிலவுவதாகவும் எச்சரித்தது.
இந்த நிலையில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மறு ஆய்வு செய்யவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நேற்று  ஆக்ராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது,
இந்த நாட்டு மக்களை கருப்புப் பணத்தின் பிடியிலிருந்தும், ஊழல் பிடியிலிருந்தும், கள்ளப் பணத்திலிருந்தும் விடுவிக்க பாடுபடுகிறேன். இதற்காக மக்கள் தந்து வரும் ஒத்துழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.
எனது நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். இதற்காக வணங்குகிறேன். கடும் சிரமத்திற்கு மத்தியிலும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
தலித்துகள், ஆதிவாசிகள், விவசாயிகள், தாய்மார்கள், எல்லோருமே சிரமப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் கஷ்டம் வீணாகாது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
இந்தத் திட்டத்தை நான் மறு ஆய்வு செய்வேன். அதில் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.
நாட்டின் நேர்மையான மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.  மக்கள் பட்ட துன்பம் வீண் போகாது.
இந்தத் திட்டத்திற்காக வங்கி ஊழியர்கள் சீரிய முறையிலும், கடுமையாகவும் பபணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
ஊழல் செய்தவர்கள் இப்போது ஒழுங்கான பாதைக்குத் திரும்பி வருகின்றனர். மக்கள் சங்கடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
அரசின் இந்த அறிவிப்பானது கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகும். ஏழைகளின் பணத்தை ஊழல்வாதிகள் கொள்ளையடித்து வந்தனர். அதை நாங்கள் தடுத்த நிறுத்தப் பாடுபடு கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் காரணமாக  மீண்டும் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் புழக்கத்திற்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

More articles

Latest article