டில்லி

பிரதமர் மோடி தனது சொந்த சேமிப்பில் இருந்து கும்பமேளாவில் பணி புரியும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு ரூ. 21 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

பிரதமர் மோடி நீண்ட காலமாக நிதி உதவிகள் செய்து வருகிறார். அவர் குஜராத் முதல்வராக இருந்த போது தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ. 21 லட்சம் நிதியை அரசு ஊழியரின் மகள்களின் கல்விக்காக வழங்கினார். அத்துடன் பெண் குழந்தைகள் கல்வி நிதியாக அரசு சார்பில் ரூ 89.96 கோடியை நிதியாக அளித்துள்ளார்.

அவர் பிரதமராக பதவி ஏற்ற பிறகு தனக்கு கிடைத்த பரிசுகளை சமீபத்தில் ஏலம் விட்டார். இதில் கிடைத்த ரூ.3.40 கோடியை அவர் கங்கை நதி சுத்திகரிப்பு திட்டமான நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கினார். சமீபத்தில் தென் கொரியாவில் அவருக்கு கிடைத்த அமைதிக்கான பரிசான ரூ. 1.3 கோடியையும் அவர் கங்கை சுத்திகரிப்பு பணிகளுக்கு அளித்துள்ளார்.

கும்பமேளாவை ஒட்டி கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று அவர் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அப்போது அங்கு சுத்திகரிப்பு தொழிலாளர்களின் காலைக் கழுவி தொண்டு செய்தார். அவர்களுக்கு சால்வைகள் போர்த்தி கவுரவித்தார். அப்போது இந்த துப்புரவு தொழிலாளிகள் தான் உண்மையான கர்ம யோகிகள் என புகழாரம் சூட்டினார்.

இன்று பிரதமர் மோடி கும்பமேளாவில் பணி புரியும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் நல நிதியாக தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ.21 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இந்த நிதி ஏற்கனவே உள்ள கும்ப் சஃபாய் கர்மசாரி கோர்பஸ் ஃபண்ட் என அழைக்கப்படும் கும்ப மேளா சுத்திகரிப்பு தொழிலாளர் நல நிதியில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பல நல திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன..