புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளாத அமைச்சர்களின் விபரங்களை தனக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர‍ மோடி.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பாரதீய ஜனதா நாடாளுமன்ற கட்சியின் வாராந்திர கூட்டத்தில் இந்த விபரங்களைக் கேட்டுள்ளார் பிரதமர்.

நாடாளுமன்ற கூட்டங்களில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் மற்றும் விவாதங்கள் மற்றும் குழு கூட்டங்களில் கலந்துகொள்வதையும் தவறவிடுதல் கூடாது என்று அதன் உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்வது குறித்து அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற அலுவல்களில் உறுப்பினர்கள் கலந்துகொள்வதை வைத்தே, அவர்களுக்கான பதவி உயர்வுகள் உள்ளிட்டவை இருக்கும் என்று மோடி தெரிவித்தார்.

உறுப்பினர்களின் வருகைப் பதிவு, விவாதங்களில் பங்கேற்று பேசுதல் மற்றும் கேள்விகளை எழுப்புதல் போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ரேங்க் அளிக்கப்பட்டு, அதனடிப்படையிலேயே அமைச்சர்கள் முடிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.