சென்னை: தமிழக முதல்வராக இன்னும் ஒருமணி நேரத்தில் பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின். பதவி ஏற்பு விழாவினை காண சிறப்பு விருந்தினர்கள் கவர்னர் மாளிகை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்,

தமிழக முதலமைச்சராக இன்று மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கான  மேடை உள்பட அனைத்து பணிகள் முடிவடைந்து தயாராக உள்ளன.

நடைபெற்று முடிந்த தமிழக   சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக  118 தொகுதிகள் வேண்டும். ஆனால், திமுக மட்டுமே 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், திமுக தனிப்பெரும்பான்மையுடன் இன்று ஆட்சி அமைக்கிறது.

தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் 133 பேர் ஆதரவு அளித்தனர். இதைத்தொடர்ந்து,  திமுக சட்டமன்ற குழு தலைவராக  ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதற்கான கடிதத்தில்,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கயுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இன்று முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்க உள்ள நிலையில் நேற்று 34 அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள குறைந்த நபர்களுக்கே அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விருந்தினர்கள் கவர்னர் மாளிகைக்கு வந்தவன்னம் உள்ளனர்.

புகைப்படம்: நன்றி சன் நியூஸ்