மும்பை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் இலக்கு பாஜகவை அகற்றுவதே ஆகும் எனத் தெரிவித்துள்ளார். 

நேற்று மும்பையில் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்-அமைச்சர் சம்பாய் சோரன, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உரையில்,

மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். மக்களின் இதயத்தைப் புரிந்து கொள்ளவே ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார். நாடு முழுவதும் ராகுல்காந்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் பா.ஜ.க.வின் தூக்கம் கலைந்துள்ளது.இந்தியாவிற்கு இப்போது ஒற்றுமை தான் தேவைப்படுகிறது. அதை தான் ராகுல் காந்தி செய்து வருகிறார். ராகுல் காந்தியின் போராட்டம் தனி ஒரு மனிதனுக்காகவோ அல்லது காங்கிரஸ்காகவோ இல்லை; அது இந்தியாவிற்கானது.

பா.ஜ.க.வை வீழ்த்துவதிலேயே ராகுல்காந்தியின் வெற்றி அடங்கியுள்ளது. பா.ஜ.க.வால் அழிக்கப்பட்ட தேசத்தை மீட்கவே ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். குமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பயணம், டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றி, கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கிற, அனைத்து தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற அரசை கட்டமைப்பதில் நிறைவடைய வேண்டும்.

இந்திய கூட்டணியைக் கண்டு பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்தது 2 தான்; ஒன்று வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வது, மற்றொன்று தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வது.

இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்; ஆனால் யார் அதைச் செய்கிறார்கள் என்பது தேர்தல் பத்திர விவகாரத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது. தேர்தல் பத்திர நிதி மூலம் பா.ஜ.க. மிகப்பெரிய ஊழலைச் செய்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். பா.ஜ.க.வின் பொய் பிரசாரத்தை இந்தியா கூட்டணி முறியடிக்கும். பா.ஜ.க.வை அகற்றுவதே இந்தியா கூட்டணியின் இலக்கு.”

என்று கூறினார்.