ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மொத்தமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு செல்லும் பாதையை மறித்து, ஊர்மக்களே நடமாட முடியாதபடி அராஜகம் செய்யும் அ.தி.மு.க. (சசிகலா) ஆட்கள், அங்கு செய்தி சேகரிக்க வரும் ஊடகத்தினர் மீதும் இரண்டு நாட்களாகக் கடுமையான தாக்குதலை நடத்தி வருவதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பாக கண்காணிப்பதற்காக வெளியூர்களிலிருந்து கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கும் ரவுடிகள் நேற்று (பிப்ரவரி-11) செய்தியாளர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய படங்களும் காட்சிகளும் ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ள நிலையில் ஊடகத்தினருக்கு அ.தி.மு.க தரப்பினர் இப்படி கொலை மிரட்டல் விடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந் நிலையில், இன்று திருமதி.சசிகலா நடராஜன் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை சந்திக்கச் சென்றபோது, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகத்தினர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. பெண் செய்தியாளர்களும் இழிவு படுத்தப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.(சசிகலா) தரப்பினரின் இந்த அராஜகத்தைக் கண்டித்து ஊடகத்தினர் மறியலில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே கொடநாடு எஸ்டேட்டில் பொதுமக்களுக்கான பாதையை மறித்து அடாவடி செய்த அதே கும்பல்தான் இப்போது கூவத்தூரில் பொதுமக்களையும் ஊடகத்தினரையும் கல்வீசித் தாக்கி, கொலை மிரட்டல் விடுக்கிறது.

தமிழகத்தில் காபந்து அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க (சசிகலா) தரப்பின் அடாவடிகளை காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? சட்டம் ஒழுங்கு குறித்து டி.ஜி.பி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்திய பிறகும் இத்தகைய வன்முறையாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? என்ற கேள்விகள் எழுகின்றன.

அரசும் சட்டம்-ஒழுங்கும் சீர்கெட்டு கிடக்கும் நிலையில், ஊடகத்தினர் மீது அ.தி.மு.க (சசிகலா) தரப்பைச் சார்ந்த ரவுடிகள் நடத்திய கொடூர கொலைவெறித் தாக்குதலை தி.மு.கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதுடன், தாக்குதலை நடத்தியவர்கள் மீதும் அவர்களை ஏவியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.