சென்னை: வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை நிரூபிக்கும் வகைலேயே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் வெளியாகி உள்ளன. அனைத்து கருத்துக்கணிப்புகளுமே தமிழக மக்களின் ஒருமித்தமனநிலையை வெளிப்படுத்தி உள்ளன.
இதனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சி அமைக்கப்போகிறது திமுக. முதன்முதலாக தமிழக முதல்வராக அரியனை ஏறப்போகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 71.43 சதவிகித வாக்குகள் பதிவாயின. தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி இடையே பலத்த போட்டி நிலவியது,
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில், திமுக 173 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், ஃபார்வார்ட் பிளாக் கட்சி, தமிழக வாழ்வு உரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகியவை தலா 1 தொகுதியிலும் களம் கண்டன.
அதிமுக கூட்டணியில், அதிமுக 179 தொகுதிகளில் தனித்து களம் இறங்கியது. பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரசு 6 தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் மற்றும் பசும்பொன் தேசிய கழகம் ஆகியவை தலா 1 தொகுயில் களம் கண்டன.
இதேபோல, மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் ஒரு கூட்டணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சீமான் 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கினார். இதனால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு முன்பு மக்களின் மனநிலை என்ன என்பதை , கணித்து கருத்து கணிப்பு வெளியிட்டு திமுகவின் வெற்றியை உறுதி செய்த ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய, மக்களின் மனநிலை என்ன, யாருக்கு வாக்களித்தார்கள் என்பது குறித்தும் அவர்களின் கருத்துக்களை கேட்டு, கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்த கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி, குறைந்தபட்சம் 160 இடங்கள் முதல், அதிகபட்சம் 175 இடங்கள் வரை பெறும் என்று தெரிவிக்கின்றன.
ABP-Cvoter
கருத்துக்கணிப்புப்படி தமிழக சட்டமன்றத் தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி திமுக கூட்டணி 166 தொகுதிகளிலுன், அதிமுக 64 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், மக்கள் நீதி மய்யம் ஓரிடத்திலும், அமமுக ஒரு தொகுதியிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெறும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி
கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. இதன்படி திமுக கூட்டணி 160 முதல் 170 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 58 முதல் 69 தொகுதிகளில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமமுக 4 முதல் 6 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
P Marq
நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, திமுக 165-190 இடங்களிலும் அதிமுக 40-65 இடங்களிலும் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது. ஆகவே திமுகவே மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாணக்யா
கருத்துக்கணிப்பின்படி திமுக 164 முதல் 186 இங்களை கைப்பற்றும், அதிமு 46 முதல் 68 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளன.
இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா
கருத்துக்கணிப்பின்படி திமுக175 முதல் 195இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுக 38 முதல் 54 இடங்களை மட்டுமே பிடிக்கும் என கூறியுள்ளது.
டைம்ஸ் நவ் – சிவோட்டர்
கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணி 160 முதல் 172 இடங்களையும், அதிமுக கூட்டணி 58 முதல் 70 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியா டுடே, தந்தி டிவி உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்கள், தங்களின் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அனைத்திலும் திமுகவே வெற்றிபெறும் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக வெற்றிபெறும் என்று உறுதி செய்துள்ளன. இதன் காரணமாக தேர்தல் முடிவு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியானதும் ஓரிரு நாளில் ஸ்டாலின் தமிழகத்தில் புதிய முதல்வராக பதவி ஏற்பார்.
10ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்து அரியனை ஏறப்போவது திமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.