புதுடெல்லி:

2022-ல் உத்திரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், வாரத்தில் 4 முறை கட்சி நிர்வாகிகளை சந்திக்க பிரியங்கா காந்தி முடிவு செய்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, மக்களவை தேர்தலில் கிழக்கு உத்திரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். உத்திரப் பிரதேசத்தில் துவண்டு கிடந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா வருகை ஊக்கத்தை கொடுத்தது.

எனினும் குறிப்பிடத்தக்க வெற்றியை காங்கிரஸால் உத்திரப்பிரதேசத்தில் பெற முடியவில்லை.

இந்நிலையில், 2020-ல் நடைபெறவுள்ள உத்திரப் பிரதேச தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பிரியங்கா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக கட்சி நிர்வாகிகளை வாரத்தில் 4 முறை சந்திப்பது என்று முடிவு செய்துள்ளார்.
இந்த சந்திப்பு ராகுல் காந்தியின் இல்லத்தில் நடைபெறும்.

ரேபரலி தொகுதியில் வெற்றி பெற்ற சோனியா காந்தியும் அவரது மகளுமான பிரியங்கா காந்தியும் சேர்ந்து நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பிரியங்கா காந்தி, தான் வாரம் இரு முறை மக்களை சந்திக்கப்போவதாக தெரிவித்தார்.

அதேசமயம், மக்களவை தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பணியாற்றாத கட்சி நிர்வாகிகள் மீது அதிருப்தியடைந்துள்ளார்.

கட்சி மற்றும் தலைவர்கள் செயல் திறனை ஆய்வு செய்யப் போவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 1998-ம் ஆண்டு ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு, பிரியங்கா காந்தியின் அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் பிரியங்கா காந்தியை கட்சி நிர்வாகிகள் சந்திக்க முடியாத நிலை இருந்தது.
தற்போது எப்போது வேண்டுமானாலும் கட்சியினர் சந்திக்கலாம் என்ற நிலையை பிரியங்கா காந்தி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

கட்சி நிர்வாகிகளுடனான தொடர் சந்திப்புகள், 2022-ம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த உதவும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.