புதுடெல்லி: நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடியை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை வழங்கினார்.

அந்தக் கோரிக்கைகளில், புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டுமென்பது மிகவும் முக்கியமானது.

அந்தக் குறிப்பாணையை, மீடியாக்களிடம் வெளியிட்டு பேசிய நாராயணசாமி, “புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக, முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று, மத்திய அரசுகளிடம் கடந்த 1987ம் ஆண்டு முதலே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது” என்றார்.

பல்வேறான சூழல்களில், புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமெனக்கோரி, மாநில சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்கள், பலமுறை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்தக் கோரிக்கை மட்டும் கடைசிவரை கண்டுகொள்ளப்படுவதேயில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையிடம்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை புதுச்சேரி மற்றும் டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.