திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.28.24 கோடி மதிப்பீட்டில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொங்கியது.  இந்த பேருந்து நிலையத்தின் தலை தளத்தில், 30 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 11 கடைகள், , பெண்கள் பாலூட்டும் அறை, பொருட்கள் பாதுகாப்பகம், ஓய்வறை, கழிவறை  என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. முதல் தளத்தில் மேலும் 17 கடைகள், உணவகங்கள், காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தை, கடந்த வாரம் (டிசம்பர் 30ந்தேதி) திருச்சி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அதைத்தொடர்ந்து, இன்று அங்கிருந்து பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் உள்பட திருச்சி மாவட்டநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.