திருப்பத்தூர்: அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நிலோபர் கபீல் பெயர் இடம்பெறாததால் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடம் 171 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை முதல்வர், துணை முதல்வர் வெளியிட்டனர்.

அதில், அதிமுகவில் உள்ள 30 அமைச்சர்களில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகிய 3 அமைச்சர்களை தவிர மீதமுள்ள 27 அமைச்சர்களுக்கும், 45 எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியலில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நிலோபர் கபீல் ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன்பு குவிந்து அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறி முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.