சென்னை: கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

10ம் வகுப்பு தேர்வு ஜூன் 15 முதல் 25 வரை நடைபெற போவது உறுதி என்று தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.  ஆனால் கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முன் எப்போதும் இல்லாத வகையில் இன்று மட்டும் 1515 ஆக உள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஆகையால் 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந் நிலையில் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும்  என்று தெரிகிறது.

ஆலோசனையில் 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் நீட் தேர்வு குறித்து ஆன் லைன் வழியில் பயிற்சி ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. கூட்டத்துக்கு பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் செங்கோட்டையன் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.