கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்மார்ட் சிடி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள கோவை நகரில் தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் நகரில் 1500க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.   இந்த திட்டத்துக்காக அவர்களை காலி செய்ய மாநகராட்சி நோட்டிஸ் வழங்கி உள்ளது.   இவர்களுக்கு கீரநத்த்ம் மனுமிச்சம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இங்கு இருந்தவர்களில் 992 குடும்பத்தினர் வீடுகளை காலி செய்து அரசு ஒதுக்கிய வீடுகளுக்குக் குடி புகுந்துள்ளனர்.  எனவே காலியாக உள்ள வீடுகளை ஜேசிபி மூலம் இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.  நேற்று சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன.  இன்று மீதமுள்ள வீடுகளை இடிக்க அதிகாரிகள் வந்துள்ளனர்.

இந்த இடத்தில் இன்னும் காலி செய்யாமல் உள்ள மற்றவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தடாகம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   அந்த பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.