டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் தீவிர பரவல் எதிரொலியாக மினி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது.  மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லி, தமிழகம் உள்பட 22 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பரவி வருவது தெரியவந்துள்ளது. தொற்று பாதிப்பில் முதலிடத்தில்   மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அங்கு  167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2வது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. இங்கு 165 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 23 பேர் மட்டுமே குணமாகி உள்ளனர்.

டெல்லியில் ஏற்கனவே புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று மேலும் பல கட்டுப்பாடுகளை மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

அதன்படி, ஒமிக்ரான் மற்றும்  கொரோனா பரவல் அதிகரிப்பி காரணமாக மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்,  பள்ளிகள், கல்லூரிகள்  உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடம், யோகா மையங்கள், கேளிக்கை பூங்காக்களும்  மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டும்  பங்கேற்க வேண்டும், பொதுப்பேருந்து , மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் அனைத்துவித கொண்டாட்டங்களுக்கும் தடை என்றும்  டெல்லி அரசு அறிவித்துள்ளது.

மேலும்,  தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும், வீட்டில் இருந்து பணியாற்ற நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும்,இ உணவகங்கள் இரவு 10 மணி வரை 50 சதவீத இருறக்கைகளுடன் செயல்பட அனுமதி என்றும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.