ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்திற்கு இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு வருவதால், அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அடுத்த 2020ம் ஆண்டு முதல் ராணுவப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தேவையே இருக்காது என்று கூறியுள்ளார் மத்திய அமைசசர் ஜிதேந்திர சிங்.

அவர் கூறியுள்ளதாவது, “46 நாள் அமர்நாத் யாத்திரைக்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில், பயங்கரவாதம் அதன் இறுதி நிலையில் இருந்துகொண்டுள்ளது. எனவே, அடுத்த 2020ம் ஆண்டு முதல் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோருக்காக எந்த ராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துகொடுக்க வேண்டிய தேவையிருக்காது என்பதே எனது உள்ளுணர்வின் மூலம் நான் புரிந்துகொள்வது.

அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்திலுள்ள பல்டால் ஆகிய இரண்டு வழிகளின் வழியே, ஜுலை 1ம் தேதி யாத்திரை தொடங்கவுள்ளது” என்று தெரிவித்தார்.

சுமார் 3880 மீட்டர் உயரத்திலுள்ள குகைக் கோயிலுக்குச் செல்லும் யாத்ரிகர்களின் முதல் அணி, பகவதி நகர் முகாமிலிருந்து புறப்படுகிறது. அவர்கள், அனந்த்நாக் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களிலுள்ள முகாம்களுக்கு சென்றடைந்து, அங்கிருந்து தங்களின் புனித இலக்கை நோக்கி பயணம் மேற்கொள்வார்கள்.