டில்லி

வெளி மாநில தொழிலாளர்கள் பசி மற்றும் பொருளாதார நெருக்கடியால் அவதியுறும் விவரங்களை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடெங்கும் கடந்த மார்ச் 24 முதல் தேசிய ஊரடங்கை அறிவித்தது.   இதனால் அனைவரும் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.   இதையொட்டி அனைத்து மக்களுக்கும் அந்தந்த மாநில அரசுகள் மூலம் ரூ.1000 உதவித் தொகை மற்றும் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வெளி மாநிலத்தில் இருந்து வந்து பணி புரியும் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் இல்லாததால் அரசின் உதவியைப் பெற முடியவில்லை.   கொரோனா தாக்குதலால் அரசு உடனடியாக ஊரடங்கு அறிவித்ததால் இவர்களால் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியவில்லை.

இது போன்ற வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவ ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று முன் வந்தது.  இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “மார்ச் 27 அதாவது பிரதமர் ஊரடங்கு அறிவித்த சில தினங்களுக்குள் எங்கள் குழுவிற்கு வெளி மாநில தொழிலாளர்கள் உதவி கோரத் தொடங்கினர்.  இவர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், டில்லி, அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் வசிக்கின்றவர்கள் ஆவார்கள்.

இவர்களுக்கு அரசின் பண மற்றும் உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்காததால் மிகவும் தவித்து வந்துள்ளனர்.   இதையொட்டி நாங்கள் அந்தந்த மாநில நிர்வாகம் மூலம் இவர்களுக்குப் பணம் மற்றும் பொருட்கள் பெற்றுத் தந்துள்ளோம்.   இவ்வாறு சுமார் 44% பேருக்கு மட்டும் இவை கிடைத்துள்ளன. அவர்களுக்கும் இந்த பணம் மற்றும் உணவுப் பொருட்கள் போதுமானதாக இல்லை.

இது குறித்துக் கணக்கெடுத்ததில் அரசு அளிக்கும் ரேஷன் பொருட்கள் சுமார் 96% மக்களுக்கு அளிக்கப்படவில்லை எனவும்  அரசு அளிக்கும் சமைத்த உணவு  சுமார் 70% பேருக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிந்துள்ளது.   குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒர் பகுதியில் 3992 பேர் அதாவது 1% மக்களுக்கு அளிக்கப்பட்ட ரேஷன் இரண்டே நாளில் தீர்ந்துள்ளது.

பலருக்கு அரசு அளிக்கும் உதவிகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து எவ்வித வழிகாட்டுதலும் இல்லாததே முக்கிய காரணம் ஆகும்.  மத்திய உள்துறை அமைச்சகம் பணி அளிக்கும் நிறுவனத்திடம் இருந்து தொழிலாளர்கள் ஒரு மாத ஊதியம் பெறலாம் என அறிவித்திருந்தது.   ஆனால் பல வெளி மாநில தொழிலாளர்களுக்கு தாங்கள் பணி புரியும் நிறுவனத்தின் பெயர் கூட தெரியாத நிலை உள்ளது.

இதற்கு காரணம் அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதாகும்.  பல  ஒப்பந்ததாரர்கள் பணம் அளிக்காமல் தங்கள் மொபைல்களை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளனர். தொழிலாளர்களுக்குப் பணி புரியும் இடம் மட்டும் தெரியுமே தவிர அங்கு ஒப்பந்த தாரர் வரவில்லை எனில் அவர்களைக் கண்டு பிடிக்க முடியாத நில உள்ளது.

தலைமை நீதிபதி ஒரு வழக்கில் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும் போது ரொக்கமும் ஏன் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.    ஆனால் பல தொழிலாளர்களுக்கு மருந்து,  தொலைப்பேசி ரிசார்ஜ் போன்றவற்றுக்கு ரொக்கம் தேவைப்படுகிறது.   அரசு சார்பில் உணவு மட்டுமே அளிக்கப்படுகிறது.

இதனால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆத்திரம் மற்றும் கோபம் மும்பி மற்றும் சூரத் நகர தெருக்களில் போராட்டமாக வெடித்துள்ளது.   அவர்களிடம் பணம் கிடையாது. அடிப்படைத் தேவைகளும் கிடைப்பதில்லை.  உணவுப் பொருட்களும் பற்றாக்குறையில் உள்ளது.  இந்த ஒரு நிலை அவர்களைச் சொந்த ஊருக்கு செல்ல  தூண்டி உள்ளது.

பணி மற்றும் ஊதியம் இல்லாமல் உள்ள நிலையில் குடும்பத்தினருடனாவது இருக்க அவர்கள் நினைத்துள்ளனர்.   இது கோபம் ஆத்திரம், இயலாமை அனைத்தும் கலந்த ஒரு மனநிலையை அவர்களுக்கு அளித்துள்ளது.  அவர்களிடம் எவ்விதமான ஒரு சமூக ஒருங்கிணைப்பு மற்றும் உரிமை கோரும் நிலை இல்லாத தன்மை உள்ளதால் அவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இதை சரி செய்ய ஒரே வழி இவர்களுக்கு அளிக்கும் ரேஷன் பொருட்களை மூன்று மாதங்களுக்கு இரட்டிப்பு ஆக்க வேண்டும். அல்லது சமைத்த உணவைக் குறைந்தது இரு வேளையாவது வழங்க வேண்டும். அத்துடன் இருமாதங்களுக்கு இவர்களுக்கு மாதம் ரூ.7000 என உதவித் தொகை வழங்க வேண்டும் அல்லது இவர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால் அதன் மூலம் இவர்களது 25 நாள் ஊதியத்தை அளிக்க வேண்டும்.   இவை அனைத்தும் நிறைவேற்றினால் மட்டுமே இவர்களது தற்போதைய பிரச்சினை முடிவுக்கு வரும்” என அறிவித்துள்ளது.