டெல்லி: ஊரடங்கு ஒரு பக்கம் இருக்க, சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்களை மீண்டும் அனுப்புமாறு பீகார் முதலமைச்சருக்கு, பல மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லாக்டவுனை தொடர்ந்து, நாட்டின் பல மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இருந்து வந்தவர்கள்.

இப்போது லாக்டவுனால் அவர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பியதால் பல மாநிலங்களில் விவசாயம், கட்டுமானப் பணிகள் முடங்கி உள்ளது. அவர்கள் மீண்டும் வந்த பிறகே பணிகள் தொடங்கும் என்பதால் கடுமையான பிரச்னையாக இது கருதப்படுகிறது.

இந்த மாநிலங்களின் தொழிலாளர்கள் இப்போது பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா போன்ற பிற மாநிலங்களில் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். ஆகையால் அவர்களை மீண்டும் அழைத்து வர பல மாநில அரசுகள் முயற்சிக்கின்றன.

குறிப்பாக பீகார் மாநிலத்தில் இருந்து அதிக தொழிலாளர்கள் பல மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர். ஆகையால் அம்மாநில தொழிலாளர்களை மீண்டும் அனுப்பி வைக்குமாறு பீகார் அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரிடம் பீகார் தொழிலாளர்களை தங்கள் மாநிலத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். பஞ்சாபில் குடியேறிய தொழிலாளர்களை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும், அவர்களை மாநில அரசு கவனித்துக்கொள்ளும் என்று அவர் கூறினார்.

பஞ்சாப் மட்டுமல்ல, தெலுங்கானாவும் இதே நெருக்கடியில் இருக்கிறது. தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் சமீபத்தில் பீகார் துணை முதல்வர் சுஷில் மோடியிடம் பேசினார். மாநிலத்தின் அரிசி ஆலைகளில் பணியாற்றுவதற்காக தொழிலாளர்களை திருப்பி அனுப்புருமாறு கேட்டுக்கொண்டார்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறுகையில், மாநில தலைமைச் செயலாளர் பீகார் தலைமைச் செயலாளரிடம் பேசுவார். தொழிலாளர்களை திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்வார் என்றார்.