ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன்  உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்ஜிஆர் நடித்த நாளை நமதே பட நடிகரும், பழம்பெரும் நடிகருமான  மல்லம்பள்ளி சந்திர மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 82.  ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சந்திர மோகன் இதயம் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணியளவில் காலமானார்.

 1966-ல் ரங்குல ரத்தினம் என்ற படம் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் சந்திரமோகன்.  தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டதட்ட 932 படங்களில் நடித்துள்ளார்.  பிரபல நடிகைகள் ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஜெயசுதா போன்ற நடிகைகளுடன் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் பிரபல விருதான,   நந்தி விருதுகளை பலமுறை வென்ற  நடிகர்.

சந்திரமோகனுக்கு மனைவி ஜலந்திரா மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் மூத்த திரைப்பட தயாரிப்பாளர் கே விஸ்வநாத்தின் உறவினர். சந்திர மோகனின் இறுதிச் சடங்குகள் நவம்பர் 13ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும். பல்துறை நடிகரின் திடீர் மறைவுக்கு டோலிவுட் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

 1943  மே மாதம் 23ந்தேதி  பிறந்த சந்திர மோகனின் அசல் பெயர் சந்திரசேகர ராவ் மல்லம்பள்ளி. ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பமிடிமுக்குலா கிராமத்தில் பிறந்தார். ‘படஹரெல்லா வயசு’ படத்தில் நடித்ததற்காக சந்திர மோகன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை (1979) பெற்றார். அவர் 1987 இல் சந்தமாமா ராவே படத்திற்காக நந்தி விருதை வென்றார். அதானொக்கடே திரைப்படத்திற்காக துணை நடிகராக மற்றொரு நந்தி விருதையும் வென்றார். குணச்சித்திரக் கலைஞராக பல படங்களில் நடித்துள்ளார். 7/ஜி பிருந்தாவன் காலனியில் ஹீரோவின் அப்பாவாக நடித்தார். சந்திரமோகனின் கடைசிப் படம் ஆக்ஸிஜன்.

1975 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான நாளை நமதே படத்தில் அவரின் தம்பியாக நடித்திருப்பார். தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் கவனம் செலுத்தினார். தெலுங்கு சினிமாவில் அவர் சிறந்த நடிகருக்கான மாநில அரசின் நந்தி விருதைப் பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

கடைசியாக 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆக்ஸிஜன் படத்தில் நடித்தார். ஹீரோ, நகைச்சுவை, குணச்சித்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத்தின் உறவினர் தான் சந்திரமோகன். 7ஜி ரெயின்போ காலனி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவிகிருஷ்ணாவின் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார்.

இதனிடையே 82 வயதாகும் சந்திரமோகன், ஹைதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 10 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. சந்திரமோகன் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே 1980 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்த நடிகர் கங்கா நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது சந்திரமோகன் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.