சிறப்புக்கட்டுரை: – ஜீவசகாப்தன்

துரை மாவட்டம் மேலூரில் தினகரன் நடத்திய மாநாடு பெரிய அளவில் விவாதப் பொருளாகி யிரு்கிகறது. அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருப்பதே பலவீனப்படுத்துகிற ஒன்று,இதில் மூன்றாவதாக தினகரன் அணி உருவாகியிருப்பது கட்சிக்கு நலம் பயக்கும் செயல் அல்ல, என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருந்ததது. ஆனால்,தினகரன் நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டம் அதிமுக யார் பக்கம் ? என மீண்டும் ஒரு முறை கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இந்த மாநாட்டில் கவனிக்கவேண்டிய விசயம் என்னவென்றால்,துணிந்து வைக்கப்பட்ட சசிகலா பதாகைகள். எம்ஜிஆர் ,ஜெயலலிதா ,சசிகலா என்று மூன்று பேரின் பதாகைகளும் வைக்கப்பட்டி ருந்தது. சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிப்பதற்காக ,இவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கூட சசிகலா பதாகைகளை இவர்களால் வைக்கமுடியவில்லை. ஆனால்,எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணிந்து வைத்திருக்கிறார்கள் என்றால்,கட்சித் தொண்டர்கள் மத்தியில் மாற்றம் வந்திருக்கிறது என்றுதான் பொருள்.

மதுரை மாநாடு உணர்த்தும் செய்திகள்

மதுரைக்கும் அதிமுகவிற்கும் இருக்கும் பந்தம் தாயின் பிள்ளைக்கும் இருக்கும் உறவைப் போன்றது. எப்போதெல்லாம் அதிமுகவிற்கு வெற்றித் தேவைப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம், மதுரையே அதிமுகவிற்கு கை கொடுத்திருக்கிறது.எம்ஜிஆர் திமுகவில் இருக்கும்பொழுது இராணுவத்தையே சந்திப்பேன் என்று சொல்கிற துணிச்சலை மதுரை மண்தான் அவருக்கு தந்தது. அதே எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தைலை சந்தித்தபோது எம்ஜிஆரை கோட்டைக்கு அனுப்பி வைத்தது மதுரைக்கு அருகிலுள்ள அருப்புக்கோட்டை தொகுதிதான்.

80 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து ஆட்சிக் கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தபோது,எம்ஜிஆர் தேர்ந்தெடுத்த தொகுதி மதுரை மேற்கு. 84 ம் ஆண்டுத் தேர்தலில்,எம்ஜீஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்துக் கொண்டே வெற்றிப் பெற்ற தொகுதி அப்போதைய மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதி.

2006 லிருந்து 2011 வரை அழகிரியின் கோட்டையாக மதுரை மாவட்டம் மாறியிருந்தது. அந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவை மதுரைக்குள் வந்து பார்க்கச் சொல் என்று அழகிரி சவால் விடுக்கும் அளவிற்கு செல்வாக்குடன் இருந்தார். அந்த அழகிரி கோட்டைக்குள் சென்று, மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்திக் காட்டினார்.”அழகிரி உட்பட தா.கிருஷ்ணன் கொலையாளிகளுக்கு தண்டனைப் பெற்று தருவேன்” என்று உறுதிபூண்டார் ஜெயலலிதா. சொன்னபடி 2011 ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெற்றார்.

அதிமுக எப்போதெல்லாம்,தோல்வி முகத்தில் இருந்ததோ,அப்போதெல்லாம் நம்பிக்கை கொடுத்து தூக்கிவிட்ட மண் மதுரை. அந்த மதுரையில்தான் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் காட்டியிருக்கிறார் தினகரன்.

அது மட்டுமல்ல இந்த தருணத்தில்,தினகரனுடைய அதிமுக அனுபவத்தையும் பார்க்க வேண்டும். 96 தேர்தலில் ஜெயலலிதா உட்பட பலரும் தோல்வி என்கிற அளவிற்கு படு தோல்வியை சந்தித்தது அதிமுக. அந்த காலகட்டத்தில,கட்சியை வளர்த்தெடுக்கும் பணி தினகரனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில தென் மாவட்டங்களில் கட்சி வளர்த்ததில் அவருடைய பங்களிப்பு கணிசமானது. அந்த காலகட்டத்தில் டிடிவி தினகரனின் நன்மதிப்பை பெற்றவர்தான் ஓ.பன்னீர் செல்வம்.அதன் பிறகு ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்று முதலமைச்சரானது அனைவரும் அறிந்தது.

அதிமுகவின்  தோல்வி காலத்திலெல்லாம் கைகொடுத்த மதுரையில்,அதிமுக தோல்வி காலத்தில் கட்சியை வளர்க்கும் பொறுப்பிலிருந்த தினகரனின் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்திருப்பதை நாம் பார்க்கவேண்டும். தற்போதும் அதிமுகவிற்கு சோதனை காலம்தான்.இந்த தருணத்தில் மதுரையில் தினகரன் மாநாடு என்பதை அதிமுகவின் வரலாற்றின் போக்கிலிருந்து நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

தினகரனும் சாதியமுத்திரையும்

தினகரனுக்கு தேவர் சாதி முத்திரை இருக்கிறது. இது பிற சமூகத்தினரை நெருங்கவிடாது என்பது அரசியல் பார்வையாளர்கள் சிலரது கருத்தாக இருக்கிறது. உண்மைதான்,ஆனால் அந்த முத்திரை ஜெயலலிதா காலத்திலிருந்தே இருக்கிறது. இந்த தேவர் சாதி முத்திரை அதிமுகவின் தலித் வாக்கு வங்கியை ஒரு போதும் பாதித்ததில்லை. வடதமிழகத்தில் இருக்ககூடிய ஆதிதிராவிடர்க ளுக்கு தேவர் சாதி மீது எந்த பகைமையும் கிடையாது ஆகவே,பிரான்மலைக் கள்ளர் ,கொண்டைய கோட்ட மறவர் வாக்குகள் முழுமையாகவும்,ஆதிதிராவிடர் வாக்குகள் முழுமையாகவும் அதிமுகவிற்கு கிடைத்து வந்தது. அதே போல் கள்ளர் ஆதிக்கத்தை  கவுண்டர் உறுப்பினர்கள் விரும்பமாட்டார்கள் என்கிற பார்வையும் முன் வைக்கப்படுகிறது. இது உண்மைதான் என்றா லும்,கவுண்டர்கள் தரப்பு முன்னாள் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தினகரன் கூட்டிய விழாவிற்கு வந்திருந்ததை பார்க்க முடியும். அதற்கான காரணத்தை நாம் சிந்திக்க வேண்டும். எட்ப்பாடி பழனிச்சாமி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் ஆளுமை இல்லை என்பதை அந்த சமூகத்து மக்கள் உணர்கிறார்கள்.,

ஆட்சித் தலைமை தங்கள் வசம் வந்ததில் கொங்கு மண்டலம் குளிர்ந்தது உண்மை. ஆனால்,அவரால் தனித்து எதுவும் செய்யமுடியாது என்பதை உணர்ந்த அந்த சமூகத்திலுள்ள சிலர்,தினகரன் தரப்பை நாடி வர ஆரம்பித்துள்ளனர்.செந்தில் பாலாசி.தோப்பு வெங்கடாசலம் போன்றோர்களின் வருகையை நாம் அப்படித்தான் பார்க்கவேண்டும்.

செங்கோட்டையன் போன்றோர்கள் இது வரை தினகரன் எதிர்ப்பு பேசவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். எடப்பாடியை நமது ஆள் என்று பார்ப்பதை விட கவுண்டர் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியது சசிகலா என்கிற எண்ணமும் கவுண்டர் அமைப்புகளிடம் இருக்கிறது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிற்கு தேவர் கட்சி என்கிற முத்திரை இருந்தாலும் ,பிற சமூக மக்களும் கணிசமாக ஆதரவு தந்தனர்.ஆனால்,தற்போது தினகரன் தலைமையிலான இயக்கத்தை பிற சமூகத்தினர் ஏற்றுக்கொள்வார்களா ? என்பதை பொறுத்திருந்துதான்  பார்க்கவேண்டும்.

ஓபிஎஸ் ஈபிஎஸ் கூட்டணி பலம் பெறுமா?

தினகரனை தள்ளிவைத்து விட்டு ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைந்தால் கட்சி பலம்பெறுமா? என்று பார்த்தால் அங்கும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் பொழுதே சசிகலாவால் ஒதுக்கப்பட்ட வர்கள் பலர் ஓபிஎஸ் அணியில் இருக்கிறார்கள்.

2011 ம் ஆண்டு அமைந்த ஜெயலலிதா ஆட்சியில் ஐவர் அணியில் முக்கியமான நபராக இருந்தவர் முனுசாமி. 2014 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசி, 37 இடங்களில் இரட்டை இலை வெற்றி கண்டது. அந்த தேர்தலில் கன்னியாக்குமரி மற்றும் தருமபுரியில் மட்டும் அதிமுக தோல்வி கண்டது. கன்னியாகுமரி மாவட்டம் இயல்பாக திராவிட கட்சிகளுக்கு சாதகமாக அமையாது என்பதால்,ஜெயலலிதா அந்த தோல்வியை ஓரளவிற்கு சகித்துக் கொண்டார். ஆனால் தருமபுரி தொகுதியில்அன்புமணி வெற்றிப் பெற்று, அதிமுக தோல்வியடைந்ததை ஜெயலலிதாவால் ஏற்கமுடியவில்லை. தருமபுரி தொகுதியில் அதிமுக வன்னியர்களும் அன்புமணிக்கு வாக்களித்து விட்டனர். இதை முனுசாமி தடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு ஜெயலலிதாவிற்குச் சென்றது. அந்த கோபத்தால், முனுசாமி கட்சியில் ஓரங்கட்டி வைக்கப்பட்டார். அதன்பிறகு ஜெயலலிதா மரணம் வரை கட்சியில் முக்கிய இடத்திற்கு வரமுடியவில்லை. இந்த முனுசாமிதான் தினகரன் எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறார்.

அடுத்தப்படியாக,செம்மலை.சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் முக்கியப் புள்ளி. அங்குள்ள பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரால்,அதே மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சாரானதை ஏற்கமுடியவில்லை.சேலம் மாவட்டத்தின் முக்கிய புள்ளியான தன்னை விட எடப்பாடிக்கு முதன்மை பொறுப்பு கிடைத்துவிட்டதை   அவரது ஆளுமைக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கிறார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சாராகும் வரை செம்மலை சசிகலா ஆதரவு மனநிலையில்தான் இரு்ந்தார் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். ஆகவே செம்மலைக்கு நேரடிப் போட்டி தினகரன் அல்ல, எடப்பாடி பழனிச்சாமித்தான்.

ஆக, எடப்பாடி ஓபிஎஸ் அணி இணைவதில் இந்த இரண்டு பேரின் சம்மதமும் கிடைக்குமா? என்பதில் அய்யம் இருக்கிறது.  அது மட்டுமல்லாமல்,ஓபிஎஸ் அணியில் இருப்பவர்கள் பலர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும்,நிர்வாகிகளும் . ஆகவே அவர்கள் எடப்பாடி அணியுடன் இணைந்தால் ,பதவி எதிர்ப்பார்ப்பார்கள். அதற்கு எடப்பாடி அணியில் இருப்பவர்கள் சம்மதிப்பார்களா? என்பதும் மில்லியன் டாலர் கேள்வி.  இது போக,இந்த இணைப்பு சாத்தியமானாலும்,நடுவண் அரசின் கைப்பாவையாகத்தான் செயல்படுவார்கள் என்கிற விமர்சனம் மக்களிடம் இருக்கிறது.

தினகரன் கைப்பற்றுவாரா?

எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியின் தலைமை மீது  அதிமுக தொண்டர்களுக்கு  ஈர்ப்பு குறைந்தி ருக்கிற இந்த தருணத்தில்,தினகரன் தனது ஆளுமையை அறுவடை செய்வாரா? என்பது மிக முக்கியமான கேள்வி.

ஜெயலலிதா மக்கள் ஈர்க்கும் தலைமையாக இருந்தார்.கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் மாநில நலனிற்காக அவர் சமர் புரிந்தார் என்பதே மக்களிடம் அவருக்கு பெரிய ஈர்ப்பை ஈட்டித் தந்தது. தினகரனுக்கு தொண்டர்கள் மத்தியில் தான் ஒரு ஆளுமை என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெறும் கவர்ச்சியான தலைமை என்பதை மட்டுமே நம்பி வாக்கு சேகரிக்கும் காலம் தற்போது இல்லை. தலைவர்களை  அவதாரங்களாக நினைக்கும் தொண்டர்கள் எம்ஜிஆர் காலத்தில் இருந்தார்கள்.அது ஜெயலலிதா காலத்தில் முடிந்து விட்டது. இது சமூக வலைதளங்களின் யுகம். ஒருவர் இல்லாவிட்டாலும் ஒருவர் கேள்வி கேட்பார்.

தற்போது நடுவண் அரசு கொண்டு வரும் நீட் தேர்வு,நெடுவாசல்,கதிராமங்கலம் போன்ற விவகாரங்களில்,தினகரனின் நிலைப்பாடு என்ன என்கிற கேள்வியை தொண்டர்கள் கேட்பார்கள். ஏனென்றால்,பாஜகவை விமர்சித்ததற்காக, நமது எம்ஜிஆர் ஆசிரியர் மருது அழுகுராஜ் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. “எனது பேனாவை மோடி பறித்துவிட்டார்” என்று அவர் கூறுகிறார். இதற்கு தினகரன் என்ன பதில் சொல்ல போகிறார்?.பாஜக ஆதரவில் எடப்பாடி,ஓபிஎஸ் போன்றுதான் தினகரனும் என்கிற பெயர் வந்து விட்டால் தினகரனும் மற்றொரு அணி என்கிற பெயரைத்தான் பெறுவார். வலிமையான அணி என்கிற பெயர் நிலைக்காது.