சென்னை: நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில்,  தமிழ்நாட்டில் அதற்கான ஒருநாள் ஊதியத்தை ரூ.319ஆக உயர்த்தி மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான  100 நாள் வேலைதிட்டத்தில்,  தமிழ்நாட்டில் தற்போது நாளொன்றுக்கு ரூ.  294  ஊதியமாக வழங்கப் பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, நாடு முழுவதும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGnrega Scheme) என்ற பெயரில் 100 நாள் வேலைதிட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் நாடுமுழுவதும் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் பல லட்சக்கணக்கான ஏழை மக்கள் பசியாறி வருகின்றனர். இவர்களின் சம்பளம் உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது மத்திய பாஜக அரசு  100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதிய உயர்வை  மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு வழங்கும் தின கூலியை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த திட்டத்திற்காக, 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டது. அதன்படி, தற்போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு 8.5 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.319 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 27 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  அதுபோல புதுச்சேரிக்கும் 319 ரூபாய் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் உயர்த்தப்பட்ட மாநிலங்களில் அதிகபட்சமாக அரியானாவில் 374 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக அருணாச்சல பிரதேசத்தில் 234 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது.