சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

116 கி.மீ. நீளத்துக்கு பல்வேறு வழித்தடங்களில் அமைக்கப்பட்டுவரும் இந்த Phase II மெட்ரோ ரயில் பாதையில் அதிகளவிலான கூர்மையான வளைவுகள் இருப்பதால் சுமார் 16 கி.மீ. நீளத்திற்கு ரயில்கள் பாம்புபோல் வளைந்து வளைந்து செல்லும் என்று கூறப்படுகிறது.

இதனால் இந்த புதிய வழித்தடத்தில் மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் இது தற்போது சென்னையில் இயங்கி வரும் முதல்கட்ட மெட்ரோ ரயிலின் மணிக்கு 34 கி.மீ. வேகத்தை விட குறைவான வேகத்தில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு, மஞ்சம்பாக்கம், போரூர், ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூர்மையான வளைவுகள் உள்ளதாகவும் ஆலந்தூர் மற்றும் கோயம்பேட்டில் சில இடங்களில் ரயில்பாதையின் விட்டம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

நிலம் கையகப்படுத்துவதைக் குறைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஆலந்தூரில் வளைவின் ஆரம் 125 மீட்டராகவும், கோயம்பேட்டில் 127 மீட்டராகவும் உள்ளது இதுதவிர, போரூர் சந்திப்பில் கூர்மையான வளைவுகளும் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ரயில்பாதை வளைவின் ஆரம் 190 மீட்டருக்குக் கீழே குறையும் போது பயன்படுத்தப்படும் ‘செக் ரெயில்’ தண்டவாளங்கள் இந்த இடங்களில் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் ரயில் தடம்புரள்வதை தவிர்க்க முடியும் என்றும் ரயில்கள் கூர்மையான வளைவுகளைக் கடக்கும்போது பயணிகள் கேட்கும் அலறல் சத்தங்களைக் குறைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் முழுமை அடைந்து ரயில்கள் இயக்கப்படும் போது தற்போதுள்ள முதல் கட்ட மெட்ரோ ரயில் பாதையை விட புதிய அனுபவங்களை பயணிகள் எதிர்பார்க்க நேரிடும் என்று தெரிகிறது.