சென்னை: மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில்,  சென்னையில்   7 முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்படவும், இதனால், சாலையோர கட்டிடங்களை இடிக்கவும்,  மெட்ரோ பணி காரணமாக, இரண்டு முக்கிய மேம்பாலங்களையும் இடிக்க சிஎம்டிஏ திட்டமிட்டு உள்ளது. அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுடனான இணைப்பை மேம்படுத்த, மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 7 முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்பட வுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆய்வு பணிகளை  சென்னை பெருநகர  வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தொடங்கியுள்ளது.

அதன்படி,  சர்தார் படேல் சாலை, எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, புதிய ஆவடி சாலை மற்றும் வெளிவட்டத்தில் உள்ள பல சாலைகளை விரிவாக்கம் செய்ய சிஎம்டிஏ முன்வந்துள்ளது.

முதற்கட்டமாக, அண்ணா சாலை முதல் மத்திய கைலாஷ் வரையிலான சர்தார் படேல் சாலையில் 3 கி.மீ. தொலைவுக்கு, சாலையின் அகலம் 20 மீட்டரில் இருந்து 30.5 மீட்டராக விரிவுபடுத்தத் திட்டமிடப்படுகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான திட்ட அட்டவணை தயாரிக்கும் பணியை சிஎம்டிஏ செய்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அடையாறில் உள்ள  சர்தார் படேல் சாலையை விரிவுபடுத்தும் முயற்சியில், நடுவிலுள்ள தடுப்பை மாற்றப்படும் என்றும், இதற்காக தனியார் இடங்கள் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவடைந்தவுடன்,  எத்திராஜ் சாலையை அகலப்படுத்துவதற்கான ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படும்.

எழும்பூரில் உள்ள பாந்தியன் சாலை சந்திப்பில் இருந்து கூவம் வரை எத்திராஜ் சாலை 18 மீட்டர் அகலமாக விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதைத் தொடர்ந்து,  கோடம்பாக்கம் நெடுஞ்சாலையையும் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையையும் இணைக்கும் வில்லேஜ் சாலை 27 மீட்டராக அகலப்படுத்தப்படும்.

நெரிசல் நேரங்களில் போக்குவரத்தை மேம்படுத்தவும், போக்குவரத்துக்கான இடையூறுகளை அகற்றவும், போக்குவரத்து நெரிசலை எளிதாக்கவும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான இணைப்பை  மேம்படுத்தவும் மற்றும் பெருநகரப் பகுதியில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும் சாலை விரிவாக்கம் முன்மொழியப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்,  கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையின் அகலம் 18 மீட்டராகவும், ஹண்டர்ஸ் சாலை 24 மீட்டராகவும், கோடம்பாக்கம் ஹைரோடு மற்றும் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் வில்லேஜ் சாலை 27 மீட்டராகவும் விரிவுபடுத்தப்படும். நெல்சன் மாணிக்கம் சாலை – ஸ்டெர்லிங் சாலை சந்திப்பில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரை 18 மீட்டருக்கு டேங்க் பண்ட் சாலை அகலப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி  ஈ.வே.ரா. சாலையில் இருந்து புதிய ஆவடி சாலை. பெரியாறு சாலை முதல் கீழ்ப்பாக்கம் வரை 18 மீட்டருக்கு நீர்நிலைகள் செல்லும் பாதைகள் அகலப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

சிறுவள்ளூர் சாலை சந்திப்பு முதல் நகர எல்லை வரையிலான பேப்பர் மில் சாலை 18 மீட்டராக விரிவுபடுத்தப்படும். எல்.பி. அடையாறில் உள்ள சாலை 30.5 மீட்டராக விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 7 முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்படுவதால் அந்த சாலை பகுதிகளில் உள்ள பழமையான கட்டங்கள், மரங்கள் அடிபடுவதால் அவைகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல, மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னையில் இரு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இடிக்கப்படும் இடங்களில், மெட்ரோ பணிகள் முடிந்த பிறகு மீண்டும் பாலங்கள் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி,  அடையாறு சந்திப்பில் உள்ள மேம்பாலமும் ராதாகிருஷ்ணன் சாலை-ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலமும் இடிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கட்டப்படும் கூறப்படுகிறது.

அடையாறு சந்திப்பில் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில், மெட்ரோ பணி துவங்குவதற்கு முன்னதாக, இடிக்கப்படும் பகுதிக்கு மாற்றாக புதிய இருவழி மேம்பாலம் கட்டப்படும். பின்னர் இடிக்கப்பட்ட பகுதி நான்கு வழிச்சாலை மேம்பாலமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலம் இடிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கட்டப்படும்.

இந்த மேம்பாலங்களின் கீழ் அமைக்கப்படவுள்ள இரண்டு (பாதாள)மெட்ரோ ரயில் நிலையங்களும், மாதவரம் மில்க் காலனியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிமீ தொலைவில் அமையவுள்ள மெட்ரோ 2-ம் கட்ட பணியின் 3 ஆவது பாதையின் ஒரு பகுதியாகும். இந்த மெட்ரோ ரயில் பணிகள் 2026-க்குள் முடிக்கப்படும்.

அடையாறு சந்திப்பில், சிஎம்ஆர்எல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்படுவதால், போக்குவரத்தை சீர்செய்ய, பாதை இருவழியாக மாற்றப்பட உள்ளதாகவும்,  தொடக்கத்தில், பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு தற்காலிகமாக இரும்புப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்காலிக பாலத்தைக் கட்டி அகற்றுவதில் எந்த பயனும் இல்லை என்பதாலும் இது கான்கிரீட் பாலத்தை விடவும் பட்ஜெட் அதிகம் என்பதாலும் வேறு பாலத்தை கட்ட முடிவு செய்துள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆர்.கே.சாலை – ராயப்பேட்டை சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை நோக்கிச் செல்லும் மேம்பாலத்தின் 50% பகுதி இடிக்கப்படும். மேம்பாலம் அகற்றப்பட்ட பின், அங்கு போக்குவரத்து பாதையை மாற்றும் திட்டம் உள்ளது’ என்றார். அடையாறு பேருந்து பணிமனையின் 15மீ ஆழத்திலும் ஆர்.கே.சாலையில் 17மீ ஆழத்திலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.