“மெர்சல்” விஜய்

சென்னை,

மெர்சல் படத்தில் அரசுக்கு எதிராக பேசியிருப்பதாக கூறி,  படத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு குறித்து பேசி இருக்கிறார். இது  இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகவும், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கில் ஆஜரான மனுதாரர் அஸ்வத்தாமன் கூறும்போது, ஜி.எஸ்.டி. பற்றி தவறான கருத்து இருப்பதாக வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். இது சினிமாதானே ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்.

மெர்சல் படத்தில் என்ன தவறு உள்ளது என்பதை கூறுங்கள்,  மெர்சல் பட வசனங்கள் மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் கூறுங்கள் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

பேச்சு, கருத்து சுதந்திரம் இல்லையா என்றும், உலக அளவில் ஊட்டச்சத்து குறைப்பாட்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா. மேலும்  மாற்று திறனாளிகளை தவறாக சித்தரித்திருந்தால் கோர்ட்டுக்கு வரலாம். அப்படி காட்சிகள் எதுவும் வரவில்லை மேலும் பொதுநலனில் அக்கறை இருந்தால் குடிப்பது போன்ற காட்சிகளை நீக்கலாம் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

விசாரணையை அடுத்து மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.