சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி  தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் (25ந்தேதி) பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து இன்றுமுதல் விசாரணை ஆணையம் தனது பணியை தொடங்கி உள்ளது. இந்த கமிஷனுக்காக சென்னை எழிலகத்தில் உள்ள கலசா மஹால், முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் விசாரணை எப்படி இருக்க வேண்டும், யார் யாரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்பது குறித்தும், யாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் அறிந்த தனி நபர்கள், அதனை ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.  மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் நவம்பர் 22ம் தேதி வரை தெரிவிக்கலாம்.

சத்திய பிரமாண உறுதிமொழி பத்திர வடிவில் தகவல்களை தெரிவிக்க வேண்டும். பதிவுதபாலில் தகவல்களை அனுப்பலாம் .  நவ.22 ந்தேதிக்குள் இது போன்ற தகவல்களை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர் விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்றார்.

மேலும், விசாரணையை  வரும் 30ந்தேதி முதல் ஜெயலலிதாவின்  போயஸ் கார்டனில் இருந்து தொடங்க இருப்பதாகவும்  ஆணையத் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளா

கடந்த ஆண்டு மரணம் அடைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுமார் 70 நாட்கள் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் நலம் தேறி வருகிறார் என்று கூறிக்கொண்டே, கடைசியில் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும், எதிர்கட்சி யினரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இதையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து முதல்வர் எடப்பாடி தலைமையிலான  தமிழக அரசு கடந்த செப்டம்பர்.25-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, செப்டம்பர்.29-ம் தேதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அதன்படி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.