ஷில்லாங்: மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான கான்ராட் சங்மா, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து  மீண்டும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.

60தொகுதிகளைக்கொண்ட மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் மார்ச் 2ந்தேதி எண்ணப்பட்டது. இதில், ஆளும்கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பதால், ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அக்கட்சிக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. மேலும் சில சுயேச்சைகளும் அதரவு தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து, இன்று காலை மாநில கவர்னர் முதல்வர் பதவிக்கான ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பாகு செளஹானிடம் கான்ராட் சங்மா வழங்கினார்.  தொடர்ந்து, மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது பாஜக மற்றும் ஆதரவாளர்களின் கடிதத்தையும் வழங்கினார்.

 அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கான்ராட் சங்மா, பாஜக எங்களுக்கு முழு ஆதரவைக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. அதனால் ஆளுநர் பாகு செளஹானைச் சந்தித்து ஆட்சி அமைக்க நாங்கள் உரிமை கோரினோம். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தோம். பாஜக மற்றும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேசிய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி)-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், தோ்தலுக்கு முன்பு இரு கட்சிகள் இடையே விரிசல் ஏற்பட்டு, இரு கட்சிகளும் தனித்தனியாக களமிறங்கியது. இந்த நிலையில்,  தேசிய மக்கள் கட்சி பெரும் வெற்றி பெற்ற நிலையில், பாஜக 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இருந்தாலும் ஆட்சி அமைக்க, தேசிய மக்கள் கட்சிக்க பாஜக உதவியுள்ளது.