இந்தூர்:  இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில் நடைபெற்று முடிந்துள்ளது. ஒரு வாரம் கிடைத்த ஓய்வில் தங்களது பழைய தவறுகளை திருத்திக்கொண்ட ஆஸ்திரேலியா அணி வீரர்கள், ஸ்பின்னுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த இந்தூர் ஆடுகளத்தில் சிறப்பாக பேட் செய்ததுடன், பந்து வீச்சிலும் இந்திய பேட்ஸ்மேன்களை சரணடைய வைத்தனர்.

இதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்து, ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் சரணடைந்து முதல் நாள் தேநீர் இடைவெளிக்கு முன்பே 109 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய இடது கை ஸிபின் பெளலர் மேத்யூ குன்னெமன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா, 88 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 197 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய பெளலர்களில் ஜடேஜா 4, அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இரண்டாவது இன்னங்ஸை தொடர்ந்த இந்தியா 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், குறைந்தது 200 ரன்களாவது முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. நதான் லயன் பந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தனர். புஜாரா மட்டும் நிதானமாக பேட் செய்து அரைசதம் அடித்தார். 163 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட் ஆனதால் 74 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.

இதனால் 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்க்குடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த ஆஸ்திரேலியா, ஒரு விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் வெற்றியை ஆஸ்திரேலியா பெற்றது. தற்போது 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

3வது டெஸ்ட்டில் தோற்ற இந்திய அணி, கடைசி டெஸ்ட்டில் ஜெயித்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஃபைனலுக்கு முன்னேறிவிடலாம். கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.