சில்லோங்:

மேகாலயா சட்டமன்றத்தில் கவர்னர் இந்தி மொழியில் உரையாற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயா சட்டமன்றத்தில் கவர்னர் கங்கா பிரசாத் நேற்று உரையாற்றினார். அவர் இந்தி மொழியில் உரையாற்றியதால் ஒரு பிரிவு எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் எம்எல்ஏ வெளிநடப்பு செய்தார். கவர்னர் உரை மீதான விவாதம் காசி மொழியில் தான் நடைபெற வேண் டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேகாலயா சட்டமன்றத்தில் ஆங்கிலம் தான் பிரதான மொழியாக உள்ளது. கரோ மற்றும் காசி மொழிகள் அரிதாக தான் பயன்படுத்தப்படும். காங்கிரஸ் எம்எல்ஏ அம்பரீன் லிங்டோ கவர்னரில் இந்தி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மொழியாக்கம் செய்பவரை நியமனம் செய்திருக்க வேண்டும். இது தவறான நடைமுறை. இதை நான் ஆதரிக்கமாட்டேன்’’என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதமும் நடந்தது. எதிர்கட்சி தலைவர் முகுல் சங்மா கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி கவர்னராக பதவி ஏற்றார். அனைவருக்கும் புரியும் வகையிலான மொழியில் கவர்னர் உரையாற்றுவது தான் உகந்தது’’ என்றார்.

எம்எல்ஏ ஆடல்பெர்ட் நான்குரூம் பேசுகையில்,‘‘ கவர்னர் காசி மொழியில் தான் உரையாற்ற வேண்டும். இது போராட்டம் கிடையாது. ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு உறுப்பினரும் புரிந்து கொள்வது அவசியம்’’ என்றார்.

சபாநாயகர் டோன்குபர் ராய் பேசுகையில்,‘‘மொழி பயன்பாடு குறித்த விதிமுறைகளை உறுப்பினர்கள் பார் க்க வேண்டும். மொழி பயன்பாடு குறித்து அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது’’ என்றார். பின்னர் சபாநாயகர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அலுவலக மொழிகளில் பேசுவது, உரையாற்றுவது, விவாதம் செய்வது தடுக்கப்படவில்லை. கவர்னர் உரையின் மொழியாக்கம் எழுத்துப்பூர்வமாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

முதல்வர் கான்ராட் சங்மா கூறுகையில், ‘‘கவர்னருக்கு இந்தி மொழியில் பேசுவது தான் சவுகர்யமாக இருப்பதாக உணர்ந்தார். இது வெளிநாட்டு மொழி கிடையாது. இந்தி இந்தியாவின் மொழி தான். இதில் ஏன் சர்ச்சையை கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆங்கில பேச்சு நகலும் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆர்எஸ்எஸ் பின்பலத்தில் இயங்கும் பாஜக நாடு முழுவதும் ஒரே மொழி கொள்கை என்ற அடிப்படையில் மேகாலயா சட்டமன்றத்தில் இந்தியை பயன்படுத்த முயற்சி செய்கிறது. இதற்கு பாஜக ஆதரவுடன் செயல்படும் தேசிய மக்கள் கட்சியின் அரச துணை போகிறது என்று எம்எல்ஏ.க்கள் குற்றம்சாட்டினர்.