சென்னை:
மிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாமில் 1.15 மணி நிலவரப்படி 10.57 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது.  விரைவில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.   எனவே இதையொட்டி நாடெங்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  தமிழகத்தில் கடந்த 4 வாரங்களாக ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த தடுப்பூசி முகாம்களில் இலக்கை தாண்டி ஒவ்வொரு முறையும் அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
அவ்வகையில் இன்று தமிழகம் முழுவதும் 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக மாநிலத்தில் 30000 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.    இந்நிலையில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 1.15 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 10.57 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 30 ஆயிரம் முகாம்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய கொரோனா தடுப்பூசி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், சின்னமலை, புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்க பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்துள்ளார்.