சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரும் 26ந்தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் 3வது கட்டமாக நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும்  3-வது அலை வருவதற்கு முன்பே, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஏற்கனவே 2 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (26ந்தேதி) 3வது தடுப்பூசி முகாமை நடத்துவதாக அறிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  வரும் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் மையங்களில் ‘மெகா தடுப்பூசி’ முகாம் மீண்டும் நடைபெற உள்ளது. அன்று ஒரே நாளில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசி உள்ளது. மேலும் 14 லட்சம் தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,  மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் இதுவரை 9 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்றும் கூறினார்.