Home இந்தியா

மின்னணு பண பரிவர்த்தனை: மோடி அரசின் புத்தாண்டு மெகா தள்ளுபடி…..!

டில்லி,
மின்னணு முறையில் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டால் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி கிடைக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்து உள்ளார்.
கடந்த மாதம் 8ந்தேதி ரூ.500, 1000 செல்லாது என்று மோடி அறிவித்த பிறகு, நாட்டில் பண தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பு வந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், இன்றுவரை மக்கள் பணத்திற்கு ஏடிஎம் எந்திரம் முன்பும், வங்கி வாசலில் வரிசை கட்டி நிற்பதை பார்க்க முடிகிறது.
ரூபாய் நோட்டு ஒழிப்பின் நோக்கமே கூடுமானவரை ரொக்க பரிமாற்றத்தை குறைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு பதிலாக, வேறு வழியில் பணம் செலுத்துவதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அதாவது, கிரெடிட், டெபிட் கார்டுகள், மொபைல் செயலிகள் மற்றும் நெட் பேங்கிங் எனப்படும் இணையதள வங்கி சேவை ஆகிய வழிமுறைகளை ஊக்குவித்து அமல் படுத்த விரும்புகிறோம்.
அளவுக்கு அதிகமான ரொக்க புழக்கம்தான், முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, ரொக்கம் இல்லா பொருளாதாரத்துக்கு மாற வேண்டும். இந்நிலையில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் பல வகையான தள்ளுபடிகள்  தரப்படும் என்று அருண்ஜேட்லி அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து ஜேட்லி கூறியதாவது:-
# ரெயில்வே பயணச்சீட்டு மின்னனு முறையில் பதிவு செய்தால் ரூ.10 லட்சம் வரை காப்பீடு 
# புறநகர் ரெயில்களில் மின்னணு முறையில் சீசன் டிக்கெட் வாங்கினால் 0.5 % தள்ளுபடி
# கிசான் கிரெடிக் கார்டு வைத்திருப்போருக்கு நபார்டு வங்கி மூலம் ரூபே கார்டு வழங்கப்படும்
# பெட்ரோல்,டீசல் நிலையங்களில் மின்னணு முறையில் பரிவர்த்தனை செய்தால் 0.75 % தள்ளுபடி
# பணமில்லா பரிவர்த்தனையே பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பு
# டோல்கேட்டில் கார்டு பயன்படுத்தினால் 0.5 % கட்டணச்சலுகை
# ரெயில்வே நிலையங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்தால் 5 % சலுகை
# ரெயில்களில் உணவு வாங்க மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 5 % தள்ளுபடி
# சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 10 % தள்ளுபடி
# எல்.ஐ.சி.காப்பீடுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 8 % தள்ளுபடி
#  ரூ.2 ஆயிரம் வரையிலான பண பரிமாற்றத்துக்கு சேவை வரி கிடையாது.
மேலும் மக்களை மின்னணு முறைக்கு மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.  மின்னணு பணப்பரிமாற்றமே பண மதிப்பிழப்பு அறிவிப்பின் இலக்கு என்றும் கூறினார்.
ரிசர்வ் வங்கி திட்டமிட்டபடி புதிய பண தாள்களை வெளியிட்டு வருகிறது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மின்னணு பரிவர்த்தனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஜேட்லி கூறினார்.

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெறுவதற்காக, வர்த்தகர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் சார்பில் 6 லட்சத்து 50 ஆயிரம் ‘ஸ்வைப்பிங்’ எந்திரங்கள் (பாயிண்ட் ஆப் சேல் கருவி) வழங்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பண பரிமாற்றத்தை கிராமப்புறங்களிலும் பரப்பும் வகையில், சுமார் 10 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட ஒரு லட்சம் கிராமங்களில் தலா 2 ‘ஸ்வைப்பிங்’ எந்திரங்கள் பொருத்தப்படும். இதற்கு தேவையான நிதி உதவி, ‘நபார்டு’ நிறுவனம் மூலம் வங்கிகளுக்கு வழங்கப்படும்.
கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை சங்கங கள், பால் சங்கங்கள், வேளாண் இடுபொருள் நிலையங்கள் ஆகியவற்றில் இந்த எந்திரங்கள் நிறுவப்படும். இதன்மூலம், அந்த கிராமங்களில் உள்ள மொத்தம் சுமார் 75 கோடி பேர், தங்கள் விவசாய தேவைகளுக்கு ரொக்கம் இல்லா பரிவர்த்தனை வசதியை பெறலாம்.
‘கிசான் கார்டு’ வைத்துள்ள 4 கோடியே 32 லட்சம் விவசாயிகளுக்கு ‘ரூபே கிசான் கார்டு’ வழங்குமாறு கிராமப்புற வங்கிகளையும், கூட்டுறவு வங்கிகளையும் மத்திய அரசு ஊக்குவிக்கும். இதன்மூலம், அவர்களும் ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் மற்றும் ஏ.டி.எம்.களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த தள்ளுபடிகள் வரும் புத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.