ருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மலயத்துவச பாண்டியன், மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினின்று தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது, இறைவன் அசரீரியாக “இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும்” என்று கூறினார். இறைவன் கட்டளைப்படி குழந்தைக்குத் “தடாதகை” எனப்பெயரிடப்பட்டது. குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது.

மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்டதால் “கன்னிநாடு” எனப் பெயர் பெற்றது. தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள்.

நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். சிவனுக்குப் பக்கத்தில் தடாதகை இருந்ததை காணக் கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்றனர். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.

பெருமான் திருமணஞ் செய்தருளியது, பெருமான் போகியாய் இருந்து, உயிர்களுக்குப் போகத்தை அருளுவதை நினைப்பூட்டும். பின்பு சிவபெருமான் தாம் உலகில் அரசு நடத்திக்காட்ட திருவுளங்கொள்ள, இடபக்கொடி மீன்கொடி ஆகியது. சோமசுந்தரர், சுந்தரபாண்டியனாய்க் கோலங்கொண்டு விளங்கினார். சிவகணங்கள் மானுடவடிவு கொண்டனர். பாண்டியன் கோலம்பூண்ட சுந்தரப் பெருமாள் மக்களுக்கு அரசனாகவும், பகைவர்களுக்கு சிங்கமாகவும், உலக இன்பங்களை வெறுத்த ஞானிகளுக்கு முழுமுதலாகவும் விளங்கினார்.

உலகப்புகழ் பெற்ற சிவாலயம். பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி. சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே. சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் மந்திரம் அமையக் காரணமான சிவத்தலம்.

இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவபெருமானுக்கு நடைபெறுகின்றன. ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து தமிழை ஆராய்ந்த இடம். நக்கீரன், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டதலம். முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளை தமிழ் அரங்கேற்றியதும்,

திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை கொடுத்ததும், இத்தலத்தில்தான். பாணபத்திரருக்கு பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம். இராமர், இலட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம். திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமான் வாழும் இடம். எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்.

கலையழகும், சிலைவனப்பும், இசையமைப்பும் ஆயிரக்கணக்கான அழகிய சுதைகளையும் கொண்ட வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்டது. அம்மையும் அப்பனும் வீதியில் வருவதும், அண்டிய அன்பருக்கு இன்பமே தருவதும் மதுரையில் காலம் காலமாக நடந்து வருவதாகும். தாமரை மலர்போல் மதுரைப்பதியின் அழகும், நடுவிலுள்ள மொட்டுப் போன்ற மீனாட்சியின் ஆலயமும், மலரிதழ் போன்ற வரிசையான தெருக்களும் சேர்ந்து மதுரையைச் சிவராஜதானி என்று போற்றச் செய்துள்ளன. நவக்கிரக ஸ்தலத்தில் புதன் ஸ்தலமாகும்.

14 கோபுரமும் 5 வாயிலும் உடைய மிகப்பெரிய கோயில். கலையழகும், சிலையழகும், சிற்பத்திறனும், சிற்பவனப்பும், நாத அமைப்பும் கொண்டது. பல மூர்த்திகளின் திருவுருவங்களும், பொற்றாமரைக்குளமும், கோயில் விமானங்களும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குகின்றன. முத்தமிழுக்குரிய இயல், இசை, நாடகங்களைக் காட்டும் கலைக்கோயிலாகவும், சிலைக்கோயிலாகவும் இத்தகோயில் விளங்குகிறது. தெற்கு கோபுரம் தான் மிகவும் உயரமானது.

சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் “மதுரை” எனப் பெயர் பெற்றது.

சிவபெருமானுக்கு அணியாயிருந்த பாம்பு வட்டமாய் வாலை வாயாற் கவ்வி மதுரையின் எல்லையைக் காட்டியதால் “ஆலவாய்” என்ற பெயர் வந்தது.

கடம்பமரம் அடர்ந்த காடாக இருந்ததால் “கடம்பவனம்” எனப் பெயர் பெற்றது.

மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டுப் பெருமான் தம் சடையினின்றும் விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடிக்காத்ததால் “நான்மாடக்கூடல்” எனப் பெயர் ஏற்பட்டது.

இங்குள்ள அம்மனின் பெயர் மீனாட்சி. தமிழில் அங்கயற்கண்ணி. மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப்போல அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தன் அருட்கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறார்.

மீன் கண்ணுக்கு இமையில்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல, தேவியும் கண் இமையால் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார்.

இங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது.

வேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர். தாயுள்ளத்தோடு அன்னையும் அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வருவதால்தான் உலகம் முழுவதும் தனக்கு பக்தர்கள் உள்ளவளாக அன்னை மீனாட்சி விளங்குகிறாள். இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைம்கும், முக்தியும் கிடைக்கும். இங்குள்ள சுவாமி பிராகரத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம். அத்தனை அமைதி வாய்ந்த ஒம் என்ற நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு ஒலிக்கும் அளவுக்கு மிகவும் நிசப்தமான பிரகாரம் அது. இங்கு எப்போதும் பக்தர்கள் தியானத்தில் அமர்ந்திருப்பதை நாம் கோயிலை வலம் வரும்போது காணலாம். தவம், தியானம் செய்ய ஏற்ற தலம் இது.

சுவாமிக்கு பால், எண்ணெய், இளநீர் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல், வேள்வி புரிதல், தவம் செய்தல், தியானம் செய்தல் ஆகியவை இத்தலத்தில் செய்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும். அத்தனை சிறப்பு வாய்ந்த சிவத்தலம். அம்பாளுக்கு பட்டுப்புடவை சாத்துதல், சுவாமிக்கு உலர்ந்த தூய ஆடை அணிவித்தல், தங்களால் முடிந்த அபிஷேக ஆராதனைகள் இங்கு இறைவனுக்கும், அம்மனுக்கும் பக்தர்களால் செலுத்தப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவற்றை செய்யலாம். தவிர யாகம் செய்தும் வழிபடலாம்.