சென்னை: தமிழகஅரசின் சட்டத்தின்படி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வழங்கப்பட்டுள்ள 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் சேர்க்கை பெற்ற 2 மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ உபகரண தொகுப்பினை வழங்கி வாழ்த்தினார்.

அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5%  இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற 2 மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பினை வழங்கி, வாழ்த்தினார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.5.2022) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கள்ளர் சீரமைப்பு  பள்ளிகளில் பயின்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், கன்னியாகுமரியில் உள்ள ஶ்ரீ மூகாம்பிகா இன்ஸ்ட்டி டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் MBBS மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்ற மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செல்வி S. தங்கபேச்சி மற்றும் குன்றத்தூரில் உள்ள மாதா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் BDS பல்மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்ற மதுரை மாவட்டம், செக்கானூரணி, அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி செல்வி S. புவனேஸ்வரி ஆகிய மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பினை வழங்கி, வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர்,   மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் திரு. ஆ. கார்த்திக், இ.ஆ.ப., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் முனைவர் மா.மதிவாணன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.