டெல்லி:

மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக் கூடியதாக நுழைவு தேர்வு இருப்பதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


நுழைவு தேர்வுகள் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக் வந்தது.

அப்போது எஸ்எப்ஐ வக்கீல் தீபக் பிரகாஷ் பேசுகையில்,‘‘ தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. இதை மத்திய அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும். வசதி படைத்த மாணவர்களுக்கு ஏற்ற வசதிகளை மட்டுமே இந்த நிறுவனங்கள் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்.

இது ஏழை மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இந்த பயிற்சி இல்லை என்றால் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் சேர முடியாது என்ற ரீதியில் இந்த மையங்கள் விளம்பரங்கள் செய்கிறது. இதனால் பெற்றோரின் வருமானத்திற்குள் பயிற்சியில் சேர முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள தூண்டும் வகையில் உள்ளது’’ என்றார்.
நீதிபதில் கூறுகையில், ‘‘பயிற்சி மையங்களே இருக்க கூடாது என்று சொல்லக் கூடாது. இந்த பயிற்சி மையங்களால் பள்ளிகள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இதை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பது தான் கேள்வி. அரசு தான இதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

மனித வள மேம்பாட்டு துறை வக்கீல் ஹர்விந்தர் ஹவுர் பேசுகையில்,‘‘இந்த பிரச்னை குறித்து அரசு பரிசீலக்கும். மாணவர்களின் நலனில் அரசு அக்கறை செலுத்தும். 2014ம் ஆண்டு சிபிஎஸ்இ சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இது போன்ற பயிற்சி மையங்கள் பள்ளிகளில் செயல்பட தடை விதித்தது. 2009ம் கல்வி உரிமை சட்டத்தில் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் எடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’’என்றார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் சேர நுழைவு தேர்வு என்பது மாணவர்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்த கூடியது. மாணவர்களின் எதிர்காலத்தை ஒரே ஒரு நுழைவு தேர்வு முடிவு செய்யும் என்ற முறையில் இருந்து மாற்ற வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்’’ என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில் ‘‘பள்ளி தேர்வில் பெறும் மதிப்பெண்களில் 40 சதவீதமும், நுழைவு தேர்வில் பெறும் 60 சதவீத மதிப்பெண்களையும் அடிப்படையாக கொண்டு மருத்துவம் மற்றும் பொறியியலில் மாணவர் சேர்க்கை நடைமுறைபடுத்துவது குறித்து ஆராய வேண்டும்.
மாணவனின் எதிர்காலத்தை ஒரு நுழைவு தேர்வு முடிவு செய்வது தவறான விஷயமாகும். இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அரசு தான் இந்த முறையை ஒழுங்குபடுத்தி கொள்கை வகுக்க வேண்டும். காளான்கள் போல் தனியார் நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் உருவாவதை கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.