டெல்லி: திகார் சிறையில் நானும், ப. சிதம்பரமும் மிக மோசமாக நடத்தப்பட்டோம் என்று டி.கே. சிவக்குமார் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் திகார் சிறையில் அவர் தற்போது உள்ளார். அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

ஆனால், அதே முறைகேடு வழக்கில் நிதி மோசடி குற்றத்துக்காக அமலாக்கத் துறை அவரை கைது செய்ததால், தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். அவர் இருக்கும் அதே சிறையில் தான் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே. சிவக்குமார் அடைக்கப்பட்டார்.

50 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமீன் பெற்ற அவர் விடுதலையானார். பெங்களூரு வந்த சிவக்குமாருக்கு அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந் நிலையில் திகார் சிறையில் தாமும், ப.சிதம்பரமும் மிக மோசமாக நடத்தப்பட்டதாக பரபரப்பு தகவலை அவர் கூறியிருக்கிறார். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மைசூரு, மாண்டியா பகுதிகளில் சிவக்குமார் தொண்டர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் அலுவலகம் தான் எனக்கு கோயில். எனக்கும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

எனது அரசியல் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிட்டது. இனி 7 ஆண்டுகாலம் சிறைவாசம் என்று பலர் நினைத்திருந்தனர். எந்த தப்பும் செய்யாததால் நான் நம்பிக்கையை இழக்கவில்லை.

சிக்கலான தருணத்தில் ஆதரவாக இருந்த சோனியா காந்திக்கு நன்றி. திகார் சிறையில் நானும், முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரமும் மிக மோசமாக நடத்தப்பட்டோம். இனி வரும் காலங்களில் அதை வெளியில் சொல்வேன் என்று பேசினார்.