‘அதை’ நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டது! அயோத்தி தீர்ப்பின் மூலம் அடுத்த அஸ்திரத்தை எடுக்கும் ராஜ்நாத் சிங்

Must read

டேராடூன்: பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

நூற்றாண்டு காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து அயோத்தி விவகாரத்தை, உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பின் மூலம் முடித்து வைத்திருக்கிறது. அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்து இருக்கிறது.

நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை, தீர்ப்பை மதிக்கிறோம் என்று உத்தரப்பிரதேச சன்னி வக்பு போர்டு வாரியம் அறிவித்துவிட்டது. இதன் மூலம் நூற்றாண்டுகளை கடந்தும் நிலவி வந்து பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.

இந் நிலையில் அயோத்தி தீர்ப்புக்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதன் மூலம் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று சூசகமாக கூறியிருக்கிறார்.

டேராடூனில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அனைத்து மதங்களும் ஒன்றே என்பதை இது வலிமைப்படுத்துகிறது.

மதங்களுக்கு இடையேயான உறவு இதன்மூலம் வலுப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்று இதில் பார்க்கக் கூடாது என்று கூறினார்.

இதன் மூலம் நாடு முழுமைக்குமான பொது சிவில் சட்டம் என்பதை மறைமுகமாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பொது சிவில் சட்டம் என்பது, அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்ட வழி வகைகளை செய்து கொடுப்பதாகும்.

இதனை நடைமுறைப்படுத்த போவதாக பாஜக தமது தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. ஆனால், இந்த சட்டம் நமது நாட்டுக்கு ஏற்புடையது அல்ல என்று அனைத்திந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் கூறியிருப்பது, குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article