இந்தூர்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய இளம் வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.
இந்தியா வந்துள்ள வங்கதேசம் அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டி இந்தூரில் தொடங்கி உள்ளது. அதில், முதலில் பேட் செய்த வங்கதேசம், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது.


அதையடுத்து, இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக இளம் வீரர் மயங்க் அகர்வாலும், ஹிட்மேன் ரோகித் சர்மாவும் இறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் 6 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த புஜாரா, மயங்க் அகர்வாலுடன் நிதான ஆட்டத்தை வெளிப்டுத்தினார். ஸ்கோர் 105 ரன்களாக இருந்த போது, 54 ரன்கள் எடுத்திருந்த புஜாரா ஆட்டமிழந்தார்.

3வது விக்கெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வந்த கேப்டன் கோலி, 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு டக் அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வாலும், ரகானேவும் கை கோர்த்தனர்.

இருவரும் மிக சிறப்பாக ஆடினர். தொடக்க வீரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.அவருடன் கைகோர்த்த ரகானே 86 ரன்களுடன் திருப்தி அடைந்தவராக வெளியேறினார். ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து நங்கூரமாக நின்றார்.

150 ரன்களை கடந்தபோது, கேப்டன் கோலி இரட்டை சதம் அடிக்குமாறு உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் 2வது இரட்டை சதமாகும். அதிலும் டெஸ்ட் வரலாற்றில் 11 முறை தான் மட்டை பிடித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அவர் அறிமுகமானார்.
அந்த தொடரில் அரை சதம், அதன் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மற்றொரு அரைசதம் கண்டார். விசாகப்பட்டினம் டெஸ்டில் 215 ரன்கள் குவித்தார்.


இதுவே அவரது முதல் டெஸ்ட் இரட்டை சதமாகும். அதே தென்னாப்பிரிக்கா அணியுடனான புனே டெஸ்டிலும் ஜொலித்த மயங்க் அகர்வால் அதில் 108 ரன்கள் குவித்தார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.