திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்

திருவிழா:

வைகாசியில் திருக்கல்யாணம், திருக்கார்த்திகை, சிவராத்திரி, மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்,

முகவரி:

அருள்மிகு மாதங்கீஸ்வரர் கோயில், மங்கைமடம் (வழி) திருநாங்கூர், நாகப்பட்டினம்

பொது தகவல்:

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஏகதளவிமானம் எனப்படும். இத்தல விநாயகர் வலஞ்சுழி மாதங்க விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் “ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்’ தனிச்சன்னதியில் 8 கைகளில் ஆயுதங்கள் ஏந்தியபடி அருளுகிறாள். கருவறையில் இவள் ஊஞ்சல் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். ஊஞ்சலில் ஆடும்போது இவளது தரிசனம் பெறுவது விசேஷம். இவளே விழாக் காலங்களிலும் உலா வருகிறாள். பவுர்ணமியில் காளி சன்னதியில் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வணங்குகின்றனர்.

கோஷ்டத்தில் “யோக பிரம்மா’ அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பிரகாரத்தில் மதங்க முனிவருக்கு சன்னதி இருக்கிறது.

பிரார்த்தனை

திருமணத்தடைகள் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சிவன், அம்பிகைக்கு அபிஷேகம் செய்வித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

முன்னும் பின்னும் திரும்பிய நந்திகள்:

சிவன், மாதங்கியின் திருமணம் அருகில் உள்ள திருவெண்காட்டில் நடந்தது. சிவன் திருமணத்திற்காக மதங்கரிடம் சீர் எதுவும் வாங்கவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த முக்கோடி தேவர்கள் உட்பட அனைவரும் மதங்கர் சீர் தராததை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தி பேசினர். அவர்களது எண்ணத்தை அறிந்த சிவன், தட்சணை வாங்குவது தவறு என்று அவர்களிடம் எடுத்துக் கூறினார்.ரௌ ஆனாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. எனவே சிவன் அவர்களிடம், “”மாதங்கியை மணப்பதால் அவள் வேறு, நான் வேறு இல்லை. எங்கள் இருவர் பொருளும் ஒன்றுதான்” என்று சொல்லி, சிவலோகத்திலுள்ள தன் செல்வத்தின் பெரும் பகுதியை நந்தியை அனுப்பி எடுத்து வரும்படி கூறினார்.

அதை பார்வதிக்கு கொடுத்தார். இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் முன்னும், பின்னுமாக திரும்பியபடி இரண்டு நந்திகள் இருக்கிறது. இதில் மதங்கநந்தி சுவாமியை பார்த்தபடியும், மற்றொரு நந்தி (சுவேத நந்தி) மறுபக்கம் திரும்பியும் இருக்கிறது. இதனை நந்தி சீர் பொருட்களை கொண்டு வந்த கோலம் என்கிறார்கள். பிரதோஷ வேளையில் இவ்விரு நந்திகளுக்கும் அபிஷேகங்கள் நடக்கிறது. இந்நேரத்தில் இரு நந்திகளையும் தரிசனம் செய்வது சிறப்பான பலன்களைத்தரும்.

மட்டைத்தேங்காய் நேர்த்திக்கடன்:

மாதங்கீஸ்வரி அம்பாள் தனிசன்னதியில் தெற்கு பார்த்து அருளுகிறாள். இவள் சரஸ்வதிக்கு குருவாக இருந்து கல்வி உபதேசம் செய்தவள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள கல்வியில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை பவுர்ணமி மற்றும் அஷ்டமி தினங்களில் அம்பாள் சன்னதி முன்பு நாக்கில் தேன் வைத்து எழுதி “அக்ஷராபியாசம்’ செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களது கல்வி சிறக்கும் என்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் அஷ்டமி தினத்தன்று இவளுக்கு பாசிப்பருப்பு பாயாச நைவேத்யம் படைத்து, உரிக்காத மட்டைத் தேங்காயை சன்னதியில் கட்டி வழிபடுகிறார்கள்.

மோகினி பெருமாள்:

மதங்கர் இத்தலத்தில் தவம் செய்தபோது, அவரை சோதனை செய்வதற்காக பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து இங்கு வந்தார். அவரது தவத்தை கலைக்க முயற்சி செய்தார். தவத்தில் ஒன்றியிருந்த மதங்கர் மோகினியின் செயலை ஞானதிருஷ்டியால் அறிந்து அவருக்கு சாபம் கொடுக்க கண் திறந்தார். அதற்குள் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு சங்கு, சக்கரத்துடன் அவருக்கு காட்சி தந்தார். இவர் பிரகாரத்தில் மோகினி வடிவத்திலேயே கையில் சங்கு, சக்கரத்துடன் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறார். இவரது கையில் “ஆனந்த முத்திரை’ இருக்கிறது. இவரது தரிசனம் மிகவும் விசேஷமானது.

தட்சன் நடத்திய யாகத்தை கலைத்த சிவன், ருத்ரதாண்டவம் ஆடினார். அவரது திருச்சடைமுடி பூமியை 11 இடங்களில் தொட்டது. அந்த இடங்களில் 11சிவ வடிவங்கள் தோன்றின. சிவன் நடனத்தையும் நிறுத்தவில்லை. எனவே, மகாவிஷ்ணு 11 வடிவங்கள் எடுத்து வந்து சிவனை சாந்தப்படுத்தினார். சிவன் கோபம் தணிந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இவ்வூரில் 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இதில் 9 கோயில்கள் மட்டும் இருக்கிறது. மகா விஷ்ணுவிற்கும் 11 கோயில்கள் இருக்கிறது. இந்த கோயில்கள் அனைத்தும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தலத்தில் 9 சிவன், 11 மகாவிஷ்ணு கோயில்கள் அமைந்த சிறப்பான தலம் இது.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் சிவன் பூலோகத்தை தண்ணீர் பிரளயம் மூலம் அழித்து விட்டார். இதையறியாத பிரம்மாவின் மகனாகிய மதங்கர் எனும் முனிவர் தவம் செய்வதற்காக தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்தார். எங்கும் தண்ணீர்க்காடாக இருந்ததால், அவரால் பூமியில் இறங்க முடியவில்லை. அப்போது வான்வெளியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த நாரதரிடம், பூமியில் தவம் செய்ய தண்ணீர் வற்றிய தகுந்த இடத்தை காட்டும்படி ஆலோசனை கேட்டார். அவர் சுவேத வனம் என்ற இடத்தில் தவம் புரியலாம் என ஆலோசனை சொன்னார். அதன்படி அங்கு சென்ற மதங்கமுனிவர் சிவனை வேண்டி தவம் செய்தார். சிவன் அவருக்கு காட்சி தந்தார்.

சிவனிடம் மதங்கர், “”ஜீவன்களுக்கு தந்தையாக இருக்கும் நீங்கள் எனக்கும் உறவினராக வேண்டும்” என கேட்டார். சிவன் முனிவரிடம் தகுந்த காலத்தில் அவருக்கு மருமகனாக வருவதாக கூறிவிட்டு மறைந்தார். மதங்கர் மீண்டும் தன் தவத்தை தொடர்ந்தார். ஒரு சித்ராபவுர்ணமி தினத்தன்று அவர் மணிக்கருணை ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது, நீரில் மிதந்து வந்த தாமரை மலரின் மீது ஒரு அழகிய குழந்தை இருந்ததைக் கண்டார்.

“மாதங்கி’ என பெயர் சூட்டி அவளுக்கு அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து வளர்த்தார். மாதங்கி பருவ வயதை அடைந்த போது, அவளை மணம் முடிக்கும் தகுதி சிவனுக்கு மட்டுமே உண்டு என்று அறிந்திருந்த முனிவர் சிவனை வேண்டினார். சிவன் அங்கு வந்து மாதங்கியை திருமணம் செய்து கொண்டார். பின் அவர்களிருவரும் மதங்கருக்கு சிவ, பார்வதியாக தரிசனம் தந்தனர். அவரது வேண்டுதலுக்காக சிவன், லிங்கமாக எழுந்தருளி “மதங்கீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.