சென்னை: சென்னையில் நாளை மராத்தான் ஓட்டம் நடைபெற உள்ள பல இடங்களில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து  காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ரன்னர்ஸ் மராத்தான் நெடுந்தூர ஓட்டக் குழுவினரின் சார்பாக நாளை சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து அதிகாலை 04.00 மணி அளவில் மாரத்தான் ஓட்டம் துவங்க உள்ளது. அந்த ஓட்டத்தில் சுமார் 15,000 பேர் வரை கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.

 

அவ்வாறு ஆரம்பிக்கப்படும் மாரத்தான் ஓட்டம் நேப்பியர் பாலத்தில் துவங்கி திரு.வி.க பாலம், CPT Junction, டைடல் பார்க், துரைப்பாக்கம் வழியாக தாம்பரம் மாநகர காவல் எல்லையான ராஜுவ் நகர் சந்திப்பு வந்தடைந்து அங்கிருந்து சோழிங்கநல்லூர், KK சாலை, அக்கரை ( ECR) பனையூர் வழியாக MGM வந்தடைந்து வலது புறம் திரும்பி இந்திய கடல்சார் பல்கலைகழகம் அருகில் முடிவடைகிறது.

எனவே வரும் 08-01-2023 ஞாயிறு அன்று அதிகாலை 04.00 மணிமுதல் 09.00 மணி வரை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

மத்திய கைலாஷில் இருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது.

காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர்காந்தி சாலை செல்ல அனுமதியில்லை.

மத்திய கைலேஷ், காந்தி மண்டபத்தில் இருந்து வருவோர் எல்பி சாலை, சாஸ்திரி நகர் வழியாக செல்லலாம்.

மாநகர பேருந்துகள் மட்டும், பெசன்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படும்.

சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து துரைப்பாக்கம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் இடதுபுறம் திரும்பி செம்மொழிச்சாலை வழியாக செல்ல வேண்டும்.

இந்நிகழ்விற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.