புதுடெல்லி: மராட்டிய மாநிலத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், தங்களின் விருப்பப்படி பல்வேறு மொழிகளில் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மராட்டிய மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள, சிலரின் விருப்பங்களோ ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் என்பதாகவும் இருந்தன. அதேசமயம், மராட்டிய மொழியைப் புறக்கணித்த உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

48 உறுப்பினர்களில் மொத்தம் 34 பேர் மராட்டிய மொழியில் பதவியேற்றனர். அவர்களுள், 18 சிவசேனை உறுப்பினர்களும், 11 பாரதீய ஜனதா உறுப்பினர்களும் அடக்கம். மேலும், சில மராட்டியர் அல்லாத உறுப்பினர்களும் மராட்டியிலேயே பதவிப் பிரமாணம் எடுத்தனர்.

அதேசமயம், சில மராட்டிய உறுப்பினர்களோ, ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்தனர். சதாரா தொகுதியிலிருந்து வெற்றிபெற்ற தேசியவாத காங்கிரசை சேர்ந்த உதயன்ராஜே போன்ஸ்லேவும், அகமது நகரிலிருந்து முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட பாரதீய ஜனதா உறுப்பினரான சுஜய் விகே-பட்டீலும் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

அதேசமயம், பஞ்சாபிலிருந்து வந்த அமராவதி தொகுதியில் வென்ற உறுப்பினர் நவ்நீத் ரானா, மராத்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.