முசாபர்புர்:

பீகாரில் கடந்த சில மாதங்களாக மூளைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், இதுவரை  108க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்த அதிர்ச்சி மரணத்துக்கு லிச்சி பழம் காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பீகாரில் இருந்து வரும் லிச்சி பழத்தை பரிசோதனைக்கு அனுப்ப ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் (AES)’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2வகையான மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நோயின் பாதிப்பு தொடர்ந்து வருகிறது.

கடந்த மாதங்களில் உயிரிழப்பு குறைவாக இருந்த நிலையில், இந்த மாதம்  மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 109 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள்  பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மூளைக்காய்ச்சல் நோய் பரவ, பீகார் மாநிலத்தில் தற்போது சீசனான லிச்சி பழம் காரணம் என்று சிலர் கூறி வருகின்றனர். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

பீகார் மாநிலத்தில்  கோடைகாலத்தில் அதிகமாக விளையும் பயிர்களில் லிச்சி பழமும் ஒன்று. இந்த பழம்  உடலில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்கும் என கூறப்படுகிறது.

அதே வேளையில் மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கும் உடலில் சர்க்கரை அளவு குறைவதுதான் காரணம். அதன் காரணமாகவே மருத்துவமனையில் இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, லிச்சி பழம் சாப்பிடுவதால்தான், சர்க்கரை அளவு குறைந்திருக்க கூடும் என்றும், இதன் காரணமாகவே இந்த நோய் பரவி வருவதாக வதந்திகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால், மருத்துவர்களோ, “லிச்சி பழத்தால்தான் மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது என்று அதிகாரபூர்வமான எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும் இரவினில் குழந்தைகள் இதுபோன்ற பழங்களை உண்ணுவதை விட உணவு உண்பதே அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லது” என்று தெரிவித்துள்ளார்கள்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக லிச்சி பழத்தை ஆய்வுக்கு உட்படுத்த ஒடிசா  மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஒடிசா மாநில சுகாதார அமைச்சர் நாபா கிஷோர் தாஸ் மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் லிச்சி பழங்களில் உள்ள நச்சு உள்ளடக்கத்தை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முசாபர்பூர் மாவட்டம் மற்றும் நாட்டின் பிற பகுதிகள் உட்பட பீகாரில் லிச்சி வளரும் பகுதிகளில் என்செபாலிடிஸ் பரவி வருவதாகவும், பழத்தின் நுகர்வு நோய் பரவுவதற்கான காரணிகளில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.

சந்தையில் விற்கப்படும் லிச்சியின் மாதிரியை சேகரித்து சோதிக்குமாறு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உணவு ஆணையரிடம் கேட்டுக்கொண்டது.

முன்னதாக, பீகார் சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே, அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் (AES) காரணத்தை அறிய உருவாக்கப்பட்ட ஒரு குழு, இரவில் வெறும் வயிற்றில் தூங்குவது, ஈரப்பதம் காரணமாக நீரிழப்பு மற்றும் வெறும் வயிற்றில் லிச்சி சாப்பிடுவது ஆகியவை இந்த நோய்க்கான சில காரணங்களாக இருக்கலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.