புதுடெல்லி: நரேந்திர மோடி அரசின் பல அமைச்சர்கள், காலை 9.30 மணியளவிலேயே தங்களின் அலுவலகம் வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, அந்த நேரத்திற்கு ஏற்றாற்போல், அமைச்சர்கள் தங்களின் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மாற்றியமைத்துள்ளார்கள் என்றும், அவர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின் பணிகளை மேற்கொள்வதை தவிர்க்கும்படி பிரதமர் தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, காலை 9.30 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து விடுகிறார். அவரின் சக அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அதேநேரத்திற்கு தனது அலுவலம் வந்து, தனது செயலாளர்களுடன் சந்திப்பை நடத்துகிறார்.

மேலும், தனது அலுவலக அறையில், ஒரு பெரிய காட்சி அறிவிப்பு பலகையை வைக்க உத்தரவிட்டுள்ள ராம்விலாஸ் பாஸ்வான், அதன்மூலம் பார்வையாளர்களுக்கு ஏராளமான தகவல்களை அளிப்பதற்கும் திட்டமிட்டுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் தகவல்-ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் காலை 9.30 மணிக்கே அலுவலகம் வரும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இவர்களுள் பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டாவும் அடக்கம்.

மேலும், புதிதாக அமைச்சரவையில் இணைந்துள்ளவர்களில், கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்ட பல ஜுனியர் அமைச்சர்களும் இந்த வழக்கத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.