போபால்

த்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் மகனான பிரபால் படேல் என்பவர் கொலை முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்

மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் மத்திய அமைச்சரவையில் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையை கவனித்து வருகிறார். இவர் மகன் பெயர் பிரபால் படேல் ஆகும். இவரது உறவினரான ஜலம் சிங் என்னும் சட்டப்பேரவை உறுப்பினர் மகன் மோனு படேல். இருவரும் நெருங்கிய நன்அர்கள் ஆவார்கள்.

நேற்று முன் தினம் இரவு மணல் கடத்தல் பிரச்சினை காரணமாக ஒரு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வாக்குவாதம் செய்த இருவரையும் மோனு படேல் மற்றும் பிரபால் படேல் ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தாக்கி உள்ளனர். அத்துடன் தங்களின் முன்னாள் நண்பரான பிரபுல் படேலையும் அவர் வீட்டை விட்டு வெளியில் இழுத்து தாக்கி உள்ளனர்.

பிரபுல் படேலின் தந்தை ஈஸ்வர் படேல் தன் மகனை காப்பாற்ற முயன்றுள்ளார். அவரையும் அனைவரும் சேர்ந்து கம்பி மற்றும் கட்டையால் பயங்கரமாக தாக்கி உள்ளனர்.. இந்த தாக்குதலின் போது துப்பாக்கி சூடும் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஈஸ்வர் ராய் மற்றும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் கொலை முயற்சி, ஆள் கடத்தல், ஆயுத தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் மிது வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் பிரபால் படேல் மற்றும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகி உள்ள மோனு படேலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.