டில்லி:

ட்டை விரல் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து ஷிகர் தவானுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்குவார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தவான் நடப்பு உலக கோப்பை போட்டியில் இருந்து விலகுவது உறுதியாகி உள்ளது.

நடப்பு உலககோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தின்போது, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 100 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை புரிந்தார். ஆட்டத்தின்போது, அவரது  இடதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரது கையில் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி யானது. அதன் காரணமாக தவான் 3வார காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இந்த நிலையில், தவானுக்கு பதிலாக யார்  யார் களம்  இறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளாசினர்.

இதற்கிடையில், இளம் வீரரான ரிஷப் பந்த் உடனடியாக இங்கிலாந்து வர பிசிசிஐ அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், தவான் ஆட்டத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலக்கப்படாத நிலையில், ரிஷப் பந்த் காத்துக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில்,  தவானின் கட்டை விரல் காயம் குணமாகாத நிலையில், அவர் உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதிலாக ரிஷப்பந்த் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்து உள்ளது.