இம்பால்

நாட்டில் அனைவருக்கும் சுதந்திரமாகப் பேச உரிமை உண்டு என மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் கூறி உள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், அங்கு குகி மக்கள் அதிகமாக வாழும் 5 மாவட்டங்களுக்கு எனத் தனி நிர்வாகம் வேண்டும் என குகி சமூக சட்டமன்ற உறுப்பினர்கள். கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தங்கள் பகுதிக்குத் தனி தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு குகி சமூக சட்டமன்ற உறுப்பினர்கள். 10 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.  இவர்களில் 7 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநில அரசில் இது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று இம்பாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பைரேன் சிங்கிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அவர் தனது பதிலில், ”அனைவருக்கும் ஜனநாயகத்தில் சுதந்திரமாகப் பேசுவதற்கு உரிமை உண்டு’ என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்களும். பங்கேற்றிருந்த போதும் அவர்கள் யாரும் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.