ரயில் குண்டுவெடிப்பு!! ஐஎஸ்ஐஎஸ் தொடர்புக்கு ஆதாரமில்லை…அதிகாரி பேட்டி

Must read

லக்னோ:

மத்திய பிரதேசம் மாநிலம் சாஜாப்பூர் மாவட்டம் ஜாப்தி ரயில்நிலையம் அருகே போபால் – உஜ்ஜைன் ரெயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சபீபுல்லா என்ற வாலிபரை பயங்கரவாத எதிர்ப்பு படையினர் (ஏடிஎஸ்) என்கவுன்டரில் சுட்டு தள்ளினர். இது குறித்து உ.பி. ஏடிஎஸ் தலைவர் அஸ்லிம் அருண் அளித்த பேட்டி:

பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஏன் லக்னோவில் இருந்து ரெயிலுக்கு வெடிகுண்டு வைக்க போபாலுக்கு சென்றனர்?

எனக்கு அதை பற்றி தெரியவில்லை.

இந்த ரெயில் விபத்து தொடர்பாக யாரை எல்லாம் கைது செய்துள்ளீர்கள்?

3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நேரடியாக வெடிகுண்டு வைக்கச் செல்லவில்லை. எனினும் அவர்கள் இந்த குழுவை சேர்ந்தவர்கள். அபிமானத்தின் அடிப்படையில் எதையும் கூற முடியாது. இது குறித்து மத்திய பிரேதச போலீசாரிடம் தான் நீங்கள் விசாரிக்க வேண்டும்.

சபீபுல்லா சுட்டு கொல்லப்பட்ட அன்று வீட்டில் மேலும் 2 தீவிரவாதிகள் உள்ளே இருப்பதாக கூறினீர்களே?

அந்த வீட்டின் சுவற்றில் ஓட்டை போட்டு பைபர் கேமராவை உள்ளே செலுத்தினோம். அதில் 2 பேர் இருப்பது போல் தெரிந்தது. ஒரு போர்வை தரையில் கிடந்துள்ளது. அதை நாங்கள் தவறாக கூடுதல் ஆட்கள் இருக்கிறார்கள் என்று கருதிவிட்டோம்.

துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் லக்னோ வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு இவை எப்படி கிடைத்தது?

ஆயுதம் விநியோகம் செய்த 2 பேரை கைது செய்துள்ளோம். ஈத்தவாவை சேர்ந்த பேக்ரே ஆலம் மறறும் கான்பூரை சேர்ந்த சைலேந்திர யாதவ் என்ற இந்த நபர்கள் தான் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை வழங்கியுள்ளனர்.

அவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதா?

அது பற்றி எனக்கு தெரியவில்லை

குற்றவாளிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற கூறினீர்கள். அப்புறம் அதை ஏன் திரும்ப பெற்றீர்கள்?

அவர்கள் சுய தீவிரவாதம் கொண்டவர்கள். ஐஎஸ்ஐஎஸ் கொடிகளை பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக வேலை பார்த்தார்கள் என்று அந்த அமைப்பு அறிவித்தால் தான் உண்வு. இது தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை.

சுய தீவிரவாதம் என்றால் என்ன?

ஐஎஸ்ஐஎஸ் ஒரு தாக்குதலுக்கு திட்டமிட்டால் வழக்கமாக வீடியோ அல்லது வரைபட தகவல்களை வெளியிடுவார்கள். இது போன்றதொரு நிகழ்வு இது வரை நடக்கவில்லை. கையால் பெயின்ட் செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் கருப்பு கொடி மட்டுமே வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

வீட்டில் பதுங்கி பயங்கரவாத செயலுக்கு திட்டமிட்டது குறித்து உ.பி. போலீசுக்கு ஏன் ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை?

மாணவர்கள் என்று கூறி வெளிநாட்டில் வசிக்கும் வீட்டின் உரிமையாளரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அந்த வீட்டை வாடகைக்கு பிடித்துள்ளனர்.

More articles

Latest article